அமெரிக்க புதுஅலை சினிமாவின் முக்கிய படைப்பாளியாக கருதப்படும் மார்டின் ஸ்கார்ஸேஸியின் இயக்கத்தில், அண்மையில் வெளிவந்திருக்கும் படம் வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட். ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்கிற பங்குசந்தை தரகருடைய வாழ்க்கையை பற்றி இந்த படம் பேசுகிறது. தொண்ணூறுகளில் அமெரிக்க பங்குசந்தையை கலக்கியவர் பெல்ஃபோர்ட். பல புதுவித மோசடிகளை செய்து பங்குச்சந்தையில் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிய அவர் தன்னுடைய அனுபவங்களை புத்தகமாக எழுதினார். அந்த புத்தகம் தான் இப்போது படமாக வந்திருக்கிறது.
படத்தில், ஜோர்டான் பெல்ஃபோர்ட்டாக நடித்திருக்கிறார் லியனார்டோ டிகாப்ரியோ. வேகமாக கோடீஸ்வரனாக வேண்டும் என்று எண்ணும் ஒரு நடுத்தரவர்க்க இளைஞன் எப்படி பல்வேறு மோசடிகள் செய்து பணம் ஈட்டுகிறான் என்பதே படத்தின் கதை. கேட்பதற்கு கதை சுவாரஸ்யமாக இல்லையே என்று எண்ண வேண்டாம். டிகாப்ரியோவின் ஏனெர்ஜெடிக் நடிப்பும், ஸ்கார்ஸேஸியின் ஸ்டைலான இயக்கமும் படத்தை சுவாரஸ்யமானாதாக்கி விட்டது. திரைக்கதையில் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை என்ற குறை இருந்தாலும், டிகாப்ரியோவும், அவரது நண்பராக நடித்திருக்கும் ஜோனா ஹில்லும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை பார்க்கும் போது அந்த குறை மறைந்துவிடுகிறது. எனினும் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். பங்குசந்தையில் முதலீடு செய்யும் எவரும் லாபம் பார்க்க முடியாது, பங்குசந்தையில் இடைதரகர்களால் மட்டுமே சம்மதிக்க முடியும் என்ற உண்மையை பெல்ஃபோர்ட்டின் வாழ்கையின் மூலம் சொல்கிறது இந்த படம்..
வால் ஸ்ட்ரீட் மார்டின் ஸ்கார்ஸேஸியின் இருபத்தி மூன்றாவது படம். இவரது முதல் படம் 1967-யிலேயே வெளிவந்திருந்தாலும் இவரது மூன்றாவது படமான மீன் ஸ்ட்ரீட்ஸ் (1973) தான் இவரை ஒரு தேர்ந்த கதை சொல்லியாக உலகிற்கு எடுத்து காட்டியது. ஸ்கார்ஸேஸி இத்தாலிய வம்சாவளியை சேர்ந்தவர், அமெரிக்காவில் வளர்ந்தவர். அதனால் இவருடைய பெரும்பாலான படங்கள் இத்தாலிய அமெரிக்க கலாச்சாரத்தை பற்றி பேசும். இவர் நியூயார்க்கில் தன் சிறுவயதை களித்ததால், பல படங்களில் நியூயார்க்கை தத்ரூபமாக திரையில் காண்பித்திருப்பார். இவர் பல வகையான படங்களை இயக்கி இருந்தாலும், இவர் அதிகம் பிரபலமானது மாஃபியா படங்களின் மூலம் தான்.
மீன் ஸ்ட்ரீட்ஸ் தான் இவர் இயக்கிய முதல் மாஃபியா படம். இந்த படத்தில், கதாநாயகன் இத்தாலிய அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவன். அவன் ஆஸ்திக பாதையை தேர்ந்தெடுப்பதா அல்லது மாஃபியா கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்வதா என்று தெரியாமல் குழம்புவான். அவனது குழப்பம்தான் முழு கதையையும் நகர்த்தி செல்லும். இந்த படத்தின் கதையும் நியூயார்க்கில் தான் நடக்கிறது. மீன் ஸ்ட்ரீட்ஸ் தனக்கு மிகவும் பர்சனலான படம் என்றும், ஒருவகையில் அது தன்னுடைய சொந்த வாழ்கையின் பிரதிபலிப்பு என்றும் ஸ்கார்ஸேஸியே குறிப்பிடுகிறார். உலகை திரும்பி பார்க்க வைத்த இந்த படத்தில், துணை கதாபாத்திரத்தில் ராபர்ட் டி நிரோ நடித்திருப்பார். இந்த படத்தில் தான் ஸ்கார்ஸேஸி-டி நிரோ கூட்டணி உருவானது. அதன் பின் அவர்கள் இருவரும் இணைந்து ஏழு படங்களில் பணியாற்றினார். அதில் ஆறு படங்கள் உலகின் சிறந்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது படைப்புகளிலேயே தலைசிறந்த படைப்பாக கருதப்படுவது, டிநிரோவின் நடிப்பில் 1976-யில் வெளியான டாக்ஸி டிரைவர். வியட்நாமில் போர் பணியாற்றிவிட்டு திரும்பும் கதாநாயகன் நியூயார்க்கில் டாக்ஸி டிரைவராக வாழ்க்கையை தொடங்குகிறான். தன்னை துரத்தும் தனிமையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். ஒரு கட்டத்தில் தனிமை அவனை முழுவதுமாக ஆட்கொண்டுவிட, அவனுக்கு மனப் பிறழ்ச்சி ஏற்படுகிறது. தான்தான் உலகை காக்க வந்த ஹீரோ என்று நினைத்துக்கொண்டு சட்டத்தை கையில் எடுக்கிறான். முழுக்க முழுக்க மனோதத்துவ தளத்தில் இயங்கும் இந்த படத்தில், அமெரிக்க போர் வீரர்கள் வியட்நாம் போரின் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் எப்படி தவிக்கிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கும். பெர்பெக்ட் திரைக்கதையாக கருதப்படும் இந்த திரைக்கதையை எழுதியவர் ஸ்கார்ஸேஸியின் நண்பர் பால் ஸ்க்ரேடர். உலக சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை ஸ்கார்ஸேஸி பெற்றது இந்த படத்தின் மூலம் தான். பின் அவர் இயக்கிய நியூயார்க் நியூயார்க் படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அதனால் திரைப்பட துறையிலிருந்து ஒதுங்கி இருந்த அவர், போதை பழக்கத்திற்கு அடிமையாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு ஊக்கம் அளித்து, அவரை மீண்டும் திரைத்துறைக்கு டி நிரோ அழைத்து வர, புதிய உத்வேகத்துடன் ஸ்கார்ஸேஸி இயக்கிய படம் தான் ரேஜிங்க் புல் (1980). இந்த படத்திற்கும் பால் ஸ்க்ரேடர்தான் திரைக்கதை எழுதினார். இந்த படம் டி நிரோவிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்று தந்தது. ஜேக் லொமாடா என்ற குத்துசண்டை வீரரின் வாழ்க்கையை பற்றிய படம் இது. கருப்பு வெள்ளையில் எடுக்கபட்ட இந்த படம், நவீன கருப்பு வெள்ளை திரைப்படங்களின் வரிசையில் முக்கிய இடத்தை வகிக்கிறது.
அதன் பின் அவர் சில சிறந்த படங்களை இயக்கினாலும், அவர் மீண்டும் முத்திரை பதித்தது குட்பெலாஸ் (1990) படத்தில் தான். இதுவும் ஒரு நிஜ மாஃபியாவை பற்றிய படம் தான். ஸ்கார்ஸேஸி பெரும்பாலும் நிஜ மனிதர்களின் வாழ்க்கையை தழுவியே படங்களை உருவாக்குவார். எனினும் அவை ஆவணப் படங்கள் போல் காட்சியளிக்காதபடி பார்த்துக் கொள்வார். சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம் என்பதை அவர் நான்கு உணர்ந்து வைத்திருப்பதால், அவர் படங்களில் சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது. மேலும், புது உத்திகளை மேற்கொள்ள அவர் என்றுமே தயங்கியதில்லை. இவர் படங்களில் படத்தொகுப்பிற்கும் ஆடியோகிராபிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சிறப்பான படத்தொகுப்பின் மூலம் கதையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதை உணர்தியவர் அவர். ரேஜிங் புல் தொடங்கி வால்ஸ்ட்ரீட் வரை அவர் படங்களுக்கு படத்தொகுப்பு செய்துவருகிறார் தெல்மா சூன்மேக்கர் எனும் பெண்மணி. தெல்மா சிறந்த படத்தொகுப்பிற்காக மூன்று முறை ஆஸ்கார் விருதை வென்றுள்ளார். மூன்றுமுறையும் ஸ்கார்ஸேஸியின் படங்களுக்காக தான் அந்த விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கார்ஸேஸியின் திரை மொழி அலாதியானது. சிறப்பான விசுவல்களின் மூலம் கதை சொல்லும் திறம்படைத்தவர் அவர். இந்தியாவின் அனுராக் கஷ்யப், கௌதம் மேனன் ஆகியோரின் படங்களில் ஸ்கார்ஸேஸியின் திரைமொழியின் தாக்கத்தை நிறைய பார்க்கலாம்.
ஸ்கார்ஸேஸியின் படங்களில் பணிபுரிந்த பலரும் ஆஸ்கர் விருதுகளை குவித்துக் கொண்டிருக்க, அவர் ஆஸ்கார் விருது வாங்கியது 2007-யில் தான். டிபார்டட் (2006) படத்திற்காக அவர் அந்த விருதை பெற்றார். இன்பெர்னல் அபைர்ஸ் என்ற சீன படத்தை தழுவி உருவாக்கபட்ட இந்த படத்தில், டிகாப்ரியோ, மாட் டேமன், ஜாக் நிகல்சன் என ஒரு ஸ்டார் பட்டாளமே நடித்திருக்கும். போலீஸ் உளவாளியான ஒரு கதாநாயகன் மாஃபியா கூட்டத்தை பிடிக்க அந்த கூட்டத்தில் மாறுவேடத்தில் நுழைவான். போலீஸ் அதிகாரியான இன்னொரு கதாநாயகன், அதே மாஃபியா கூட்டத்தோடு தொடர்பு வைத்திருப்பான். இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே கதை. இந்த படத்திற்கு பின் அவர் ஷட்டர் ஐலாண்ட் என்ற மனோதத்துவ த்ரில்லர் படத்தையும், ஹுகோ என்ற பீரியட் படத்தையும் இயக்கினார். இப்போது தன்னுடைய எழுபத்தி ஒன்றாவது வயதில் வால் ஸ்ட்ரீட் படத்தை இயக்கி, மீண்டும் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். அவர் விருதை வென்றாலும், வெல்லாவிட்டாலும் அவர் உலக சினிமாவில் தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக்கொண்டார் என்பதே உண்மை.