நகுலனின் நாய்-சிறுகதை


இரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு, மற்றொரு காலைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி நாயைப் போல் குரைத்துக் காட்டினான் நகுலன். அவனின் பெற்றோர் அதனை ரசித்துக் கொண்டிருந்தனர்.

ஆண்டே மிஷா தம்பதியரின் ஒரே மகன் நகுலன். கார்ப்பரேட் தம்பதிகள். அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கி ஐந்து வருடங்காளாகின்றன. ஒரு வருடத்திற்கு முன்தான் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன் குழந்தையைப் பற்றிக் கவலைப்படாத அவர்கள் திருமணம் என்ற சம்ப்ரதாயத்திற்கு உட்பட்டவுடன் சம்ப்ரதாயமாக ஒரு குழந்தைக்கு ஏங்கத் தொடங்கினர்.

கிழமை தவறாமல் தேவாலயம் சென்றும் கர்த்தா கண்திறக்காததினாலோ என்னவோ பல வருடங்கள் கூடி வாழ்ந்தும் குழந்தை உண்டாகவில்லை. சிலுவை போட்டக் கைகள் கன்னத்தில் போட்டுப் பார்த்தது, மண்டியிட்டு நமாஸ் செய்து பார்த்தது. ஒரு பயனுமில்லை. தவமாய்த் தவமிருந்து குழந்தை பெறுவதெல்லாம் இராமாயணத்தில்தான் சாத்தியம் என்று அவர்களுக்கு வெகு நாட்களுக்குப் பின் தெரிந்தது.பின் கடவுளுக்கு நிகராகக் கருதப்படும் மருத்துவர்களிடம் சென்றனர். கடவுளின் பெயர் சொல்லி காணிக்கைகளைப் பிடிங்கிக் கொள்ளும் மனிதர்களைப் போல கடவுளாகக் கருதப்பட்ட அந்த மருத்துவர்களும் லட்சங்களைப் பிடிங்கிக் கொண்டனர். எல்லோரும் ‘உங்களுக்கு எந்தக் குறையுமில்லை, நிச்சயம் குழந்தை உண்டாகிவிடும்’ என்று சொல்லிக்கொண்டிருக்கையில் நல்லெண்ணம் படைத்த ஒரு டாக்டர் சொன்னார் ‘ஸ்பெர்ம் ஸ்கார்சிடி. டோனார் தேவைப்படும். கொஞ்சம் செலவாகும். யோசனைபண்ணி சொல்லுங்க’

இரண்டு மூன்றுநாட்கள்  கதறினர். பின் மனதைத் தேத்திக் கொண்டு ஈருடல் ஓர் மனதாய் ஒரு முடிவெடுத்தனர்.யாரோ ஒரு டோனாரை நாடிச் செல்வதைவிட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து விட முடிவு செய்தனர்.

‘நகுலன்’ என்ற அந்த உன்னதமான பெயரோடே அவன் வந்து சேர்ந்தான். ‘நகுலன்’-ஆசிரமத்தில் யாரோ ஓர் தனிமை விரும்பி சூட்டிய பெயர். பல மாதங்கள் செலவு செய்து பல ஆசிரமங்கள் ஏறி இறங்கி அந்தக் குழந்தையை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆடைகள் வாங்குவதற்கே பல மணி நேரங்கள் செலவு செய்யும் ஒரு நாட்டில், குழந்தையைத் தத்தெடுக்க பல மாதங்கள் செலவு செய்வதில் தவறொன்றுமில்லையே !

புதுக் குழந்தையோடு புது வாழ்க்கை தொடங்க விரும்பிய அவர்கள் புது வீட்டிற்க்குக் குடியேறினர். பழைய இடத்திலேயே வசித்தால், தான் தத்தெடுக்கப் பட்ட விஷயத்தை நகுலனுக்கு அந்த சமுதாயம் உணர்த்திவிடும், அது அவனுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்திவிடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த அவர்கள் நிச்சயம் பகுத்தறிவுத் தம்பதிகளே…

நகுலன், நகுலன், நகுலன்…

புதிதாகக் குடி புகுந்த காலனி எங்கும் நகுலனின் பெயரே ஒலித்தது. நகுலன் எல்லோர் வீட்டுச் செல்லப் பிள்ளை. கிருஷ்ணர் ஜெயந்திக்கு நகுலனின் கால் தடங்களே எல்லோர் வீட்டிலும் நிறைந்திருக்கும். சில தினங்கள்,சாண்டா  க்ரூஸ் வேடம் அணிந்தவர்கள் வந்து அழைத்துச் சென்றுவிடுவார்கள். ரம்ஜான் கொண்டாடிடுவான் சில நேரம். தாமரைத் தாள் பணிந்திடுவான் சில நேரம். ஆண்டேவோ மிஷாவோ எதையும் தடுக்கவில்லை. மதங்களைக் கடந்த மனிதனாய் வார்த்தெடுக்கப்பட்டான்,வளர்த்தெடுக்கப்பட்டான்  நகுலன்…

இந்தியாவில் குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை. வளர்ந்து கொள்கின்றன. பாலூட்டிச் சோறூட்டிச் சீராட்டுவதே குழந்தை வளர்ப்பு என இங்கு நம்பிக் கொண்டிருக்கின்றனர். குழந்தை வளர்ப்பில் உள்ள உயிரியல் , உடலியல் மற்றும் மனோவியல் சார்ந்த விடயங்களைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்வதில்லை. தொடுதல் புரிதல் என்ற எந்த உணர்வுகளையும் பற்றி யாரும் கவலை கொள்வதுமில்லை. சம்ப்ரதயமாகவே குழந்தைகள் இங்கு வளர்க்கப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட வயது வரை பெற்றோரின் அரவணைப்பில் வளர்க்கப்படும் குழந்தைகள் பின் அவர்களின் ஸ்பரிசத்திலிருந்து அறவே நீக்கப் படுகின்றார்கள். வயது வந்த குழந்தைகளிடம் கொள்ளும் ஸ்பரிசம் தவறென்று கண் மூடித் தனமாக நம்பிக் கொள்கிறார்கள். தொடுதலிலுள்ள ஆழமும் அர்த்தமும் வேறுபாடுகளும் யாருக்கும் விளங்குவதில்லை. அதனைத் தெரிந்து கொள்ளவும் யாரும் விரும்புவதில்லை. ஆனால் இந்த விடயத்தில் ஆண்டே-மிஷாவைப் பாராட்டிட வேண்டும். அவர்கள் பகுத்தறிவோடு சேர்த்து உலகறிவும் கொண்டிருந்தார்கள். குழந்தை வளர்ப்பைப் பற்றி தேடித் தேடிப் படித்தார்கள். ஒரு குழந்தையை மனோதத்துவ ரீதியாக எவ்வாறெல்லாம் வளர்க்க வேண்டுமோ அவ்வாறெல்லாம் வளர்த்தார்கள். வடித்தார்கள். பதிமூன்று வயதிற்குப் பின் அவனிற்கு பாலியல் கல்வியையும் புகட்டிடவேண்டும் என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

இவ்வாறு பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டாலும், ‘நகுலன்’ என்ற பெயர் கொண்டதினாலோ என்னவோ அவன்  திடீர் திடீரென்று தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வான். தனி அறையில் சுழலும் மின்விசிறியைப் பார்த்தவாறே ஏதாவது சிந்திக்கத் தொடங்கிவிடுவான். பின் தனிமையை விடுத்து உடனே நண்பர்களுடன் விளையாடத் தொடங்கிவிடுவானாதலால், அவன் தனிமையில் பொதிந்திருந்த அபாயத்தை அந்த புத்திசாலித் தம்பதிகள் உணர்ந்திடவில்லை. இவ்வளவு சிறு வயதில் அவன் தனிமையை விரும்புவதை எண்ணி ஆச்சர்யம்தான் பட்டனர்…

சூரியன் உதித்து மறைந்துக் கொண்டிருக்க, பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க மூன்று வயதில் நகுலன் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

“ரொம்ப சுதார்ப்பான பையன்தான். ஆனா திடீர் திடீர்னு எதையோ சிந்திக்க ஆரம்மிச்சிடுறான். வீட்டுல ஏதாவது பிரச்சனையா ?” அந்தப் பள்ளிக்கூட ஆசிரியை ஆண்டேவிடம் வினவினார்.

அப்போதாவது சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டிய ஆண்டே சுதாரித்துக் கொள்ளவில்லை. “இல்லை, மேடம்…வீட்டுல சந்தோசமான சூழ்நிலை தான். அவன் விரும்பினதெல்லாம் வாங்கித் தரோம்…எப்பயாவது இப்படி தனியா யோசிப்பான்…ஆனா உடனே மாறிடுவான்…மே பி..டயர்ட்னஸா இருக்கும் “

ஒரே மாதிரியாகச் சுழலும் பூமியில், எல்லாம் ஒரே மாதிரியாகச் சுழலுவதில்லை. வாழ்க்கை எப்போதும் நேர்க்கோட்டுச் சித்திரமாக அமைந்து விடுவதில்லை. கிறுக்கல்கள் நிறைந்ததே வாழ்க்கை, பலநேரங்களில் அலங்கோலமான கிறுக்கல்கள். ஆனால் வாழ்க்கை எப்போது சித்திரமாகும், எப்போது அலங்கோலமாகும் என்று யாராலும் கணித்திட இயலாது. கணிக்கமுடிந்த பட்சத்தில் வாழ்க்கைக்கான அர்த்தம் தவிடுபொடியாகிடும். வாழ்க்கை, வாழ்வதற்கான அவசியத்தை இழந்து அர்த்தமற்றுப் போய்விடும். தனிமனிதனின் மனோநிலையும் அவன் மேற்கொள்ளும் முயற்சிகளுமே அலங்கோலங்களை அழகாக்குகின்றன. சூழ்நிலைகள் சில நேரங்களில் சித்திரங்களை அலங்கோலமாக்கிவிடுகின்றன. அதற்காக யாரையும் நொந்துக் கொள்ள இயலாது. தன்னுடைய வாழ்க்கை இந்தச் சிறிய நாயால்தான் அலங்கோலப் படப்போகிறது என்பதை உணராமல், அதனைக் கட்டிபிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான் நகுலன்.

“க்யூட் டாக். ஹி லைக் இட்” ஒட்டுமொத்த காலனியும் நகுலனின் நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்க, பிறந்தநாள் பரிசாகத் தான் வாங்கித் தந்த விலையுயர்ந்த நாயினைப் பற்றி பெருமிதத்துடன் தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆண்டே. நகுலன் அந்த நாயிடம் ஒட்டிக்கொண்டதை எண்ணி அலமந்து போனார்கள் அனைவரும்.

இப்போதெல்லாம் அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வதில்லை. வீட்டிலிருக்கும் நேரங்களை  அந்த நாயுடனே செலவழித்தான். நாயினை அழைத்துக் கொண்டு ஒட்டு மொத்த காலனியையும் வலம் வருவான். நகுலனைப் போலவே நாயும் அந்தக் காலனியின் செல்லமாகிவிட்டது. நாய்க்கு ஆளாளிற்கு ஏதேதோ பெயர் சூட்டினாலும், குட்டி நகுலன் என்பதே நாயின் பெயராகிப் போனது

நகுலன் வீட்டில் இல்லாத சமயங்களில் குட்டி நகுலனே அந்த காலனியின் செல்லப் பிள்ளை. இவ்வாறே ஒரு வருடம் கழிந்தது. நகுலன் அந்த நாயினை விட்டுப் பிரிவதில்லை. திடீர் திடீரென்று நாய் போல குரைத்துக் காட்டுவான். நாயின் செய்கைகளைச் செய்து காட்டுவான், அனைவரும் கைத்தட்டி ரசிப்பார்கள்.

ஒருநாள் நகுலன் அந்த நாயின் கழுத்தைப் பிடித்து நெருக்கிக் கொண்டிருப்பதை ஆண்டே கண்டுவிட்டார். நாய் மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தது. ஆண்டே ஓடிச் சென்று தடுத்துவிட்டார். நாய் சுருண்டு படுத்துவிட்டது. ஆண்டேவிற்கு எதுவும் விளங்கவில்லை.

“எல்லாருக்கும் இந்த நாயதான் பிடிக்குது” மீண்டும் நாயை நோக்கி ஓடினான் நகுலன்.

நகுலனை நோக்கிக் கத்தினார் ஆண்டே. நகுலன் மிரண்டு போய் நின்று கொண்டிருந்தான் அவர் போட்ட சத்தத்தில் உள்ளிருந்து ஓடி வந்தாள் மிஷா,

மிஷா, “வாட் ஹாப்பெண்ட்…”

“ஹீ ஈஸ் ட்ரையிங் டு கில் தி டாக்” பதறினார் ஆண்டே,

மிஷா நகுலனை அள்ளி அணைத்துக் கொண்டாள் . அவன் நெத்தியில் முத்தம் இட்டவாறே, “நத்திங் பேபி..உள்ள போலாம் வா ” என்றாள் நகுலனிடம்.

சற்று கோபமாகத் திரும்பி, “புள்ள பயந்துட்டான். ஹி மைட் ஹாவ் ப்ளேடு…இப்படியா அதட்டுவீங்க ! ” என்ற வாறே விருட்டென்று உள்ளே நுழைந்தாள்.

ஆண்டே தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். வெகு தாமதமான சிந்தனை….

ஒருநாள் பள்ளியிலிருந்து வந்த செய்தி நகுலனின் பெற்றோரை அதிர்ச்சியடைய செய்தது. “கிளாஸ் நடக்கும் போது அவன் நாய் போல ஊளையிடுறானா/ம். என்னனு சீக்கிரம் பாருங்க”  கோபமாகச் சொன்னார் தலைமை ஆசிரியை மிஷாவிடம்.

அவன் வீட்டில் அவ்வப்போது நாயைப் போல் குரைப்பதுண்டு. அதை விளையாட்டாகவே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். வெளியில் அவன் அவ்வாறு நடந்து கொள்வதை எண்ணி ஆண்டே  கவலை கொள்ளத் தொடங்கினார். நகுலனின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் தெளிவாக தெரியவந்தன.  நாயைப் போல் நாக்கால் உணவு உண்பது, நாயின் அருகில் படுத்துக் கொள்ளவது போன்ற செயல்களில் ஈடு படத் தொடங்கினான். பல நேரங்களில் வாசலில்தான் தூங்குவான். எதையோ சிந்தித்தவாறே படுத்துக் கொண்டிருப்பான். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருக்கும்.

இப்போது நகுலன் யாருடனும் சகஜமாகப் பழகுவதில்லை. அமைதியாகவே இருந்தான். பெரும்பாலான நேரங்கள் நாயையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பான்.

பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதற்கிணங்க காலனியிலும் யாரும் நகுலனை கண்டு கொள்ளவில்லை. பையன் வளர்ந்து விட்டான் என்று அவர்களும் ஒதுங்கி விட்டனர்.

நகுலன் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பள்ளிக்கும் செல்வதில்லை. ஒருவாறு அனைவரும் நிலைமையை யூகிக்கத் தொடங்கியதால் ஆண்டே மிஷா  தம்பதியர் தனி வீடு ஒன்று வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். புது வீட்டிலும் நகுலன் அவ்வாறே இருந்தான். நாயை விற்றுவிட முடிவு செய்து சிலரை அழைத்து வந்தார் ஆண்டே. அவர்கள் நாயை அழைத்துச் செல்வதைக் கண்டு மிகவும் ஆக்ரோசமாகக் கதறினான் நகுலன். வந்தவர்களும் நாயை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

“அவன் அஞ்சு வயசு குழந்தைங்க…அவனப் போய் எப்படி சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போறது?” கலங்கினாள் மிஷா

ஆண்டே,”வி டோன்ட் ஹாவ் ஹான் ஆப்சன், வி ஹாவ் டு….”

“ சோ, யு ஆர் ஹிஸ் அடாப்டட் பேரேன்ட்ஸ் ! அவன் தனியா உக்காந்து சிந்திக்கிறான்னு தெரிந்தவுடனே, you should have taken him to psychiatrist”

ஆண்டே, “இல்ல சார். ரெண்டு வயசு பையன் என்ன சிந்திக்கப் போறான்னு  நினைச்சோம்”

“குழந்தை கருவில் இருக்கும் போதே சிந்திக்கத் தொடங்கிடும்.. ரெண்டு வயசுன்னு சாதரணமா சொல்லிட்டீங்க…இன்பான்ட் ஸ்டேஜில ஒரு குழந்தை மனசுல எழுகிற எண்ணங்கள் தான் அதன் வாழ்க்கையையே நிர்ணையிக்கிறது” நிதானானமாகப் பேசினார் அந்த மனோதத்துவ நிபுணர். பகுப்பாய்வின் மூலமாக நகுலனைத் தெளிவாகப் படித்திருந்தார் அவர். அவன் உள்ளறையில் மயக்கத்திலிருந்தான். மேற்கொண்டு அந்தப் பெரியவர் சொல்லிய செய்திகளைக் கேட்கக் கேட்க ஆண்டே- மிஷா தம்பதியரின் கண்களில் நீர் பெருகி வழிந்தது.

” பொதுவா ஒரு குழந்தைகிட்ட யார வேணாலும் காட்டி இதான் உங்க அப்பான்னு பொய் சொல்லிடலாம். குழந்தை நம்பிடும். ஆனா, அம்மாவைப் பொறுத்த வரைக்கும் அது சாத்தியமில்லை. கிட்டத் தட்ட பத்து மாதம் கருவுல இருக்கிறதுனால அம்மாவைப் பற்றிய உள்ளுணர்வு குழந்தைக்கு இருக்கும். அதனால்தான் நகுலனலால சில தருணங்களில் உங்கள அம்மாவ ஏத்துக் கொள்ள முடியல. ‘நம் அம்மா வேறயாரோ’ என்ற உள்ளுணர்வு அவனுக்குள்ளத் தலைத்தூக்கும் போதெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கியிருக்கான். ஒரு வகையான பாதுக்காப்பின்மை அவனுக்குள்ள ஏற்பட்டிருக்கு..But fortunately he got good people around..அதனால பெரும்பாலும் சந்தோசமாதான் இருந்திருக்கான். அந்த நாயையும் அவனுக்கு ஆரம்பத்தில் பிடிச்சுதான் இருந்திருக்கு…

ஆனால் எல்லாரும் அந்த நாய் மேல பாசம் காட்டுறதப் பார்த்ததும், மீண்டும் அந்தப் பாதுகாப்பின்மை அவனுள் எழும்பத் தொடங்கியிருக்கு. தன் இடத்தை அந்த நாய் ஆக்கிரமிச்சுருச்சோ என்கிற பயம் அவன் மனசுல பதிஞ்சிருச்சு. தானும் அந்த நாய் போலச் செய்கை செய்தா எல்லாருக்கும் தன்னைப் பிடிக்கும்னு அவனே நினைச்சிக்கிட்டான் . That’s why he started imitating that dog. அதை நீங்கெல்லாம் விளையாட்டா எடுத்துகிட்டீங்க.

எந்த ஒரு உணர்வும் எக்ஸ்ட்ரீம் ஸ்டேட் போகக் கூடாது…ஆனா கொஞ்சம் கொஞ்சமா அவனுக்குள்ள இருந்த பாதுகாப்பின்மையும் பயமும் எக்ஸ்ட்ரீம் ஸ்டேட்ட ரீச் ஆகிடுச்சு. அதனால்தான் நாயக் கொலை செய்ய முயற்சித்ததும், ஆக்ரோசமாகக் கத்தினதும்….”

ஆண்டே, “பட்..வித் இன் எ இயர், இவ்வளவு ட்ராஸ்டிக் ச்சேஞ் எப்படி டாக்டர்”

“I too thought about it. சின்ன வயசில இருந்தே அவனுக்குள்ள இருந்த பாதுகாப்பின்மை கடந்த ஒரு வருடத்தில் அதிகமாயிருக்கு, because of that dog…ஆனா இவ்வளவு ட்ராஸ்டிக்கானதற்க்கு வேறொரு காரணம் இருக்கலாம்… அவனுடைய பெற்றோர்களில் யாரவது ஒருத்தராவது ஆட்டிஸ்டிக்கா (Autistic)  இருக்கலாம்…”

ஆண்டேவும் மிஸாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நகுலனின் நிஜப் பெற்றோர்களைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதையே அந்த பரிதாபமான பார்வை காட்டியது.

“பொதுவா சைகோ அனலிசிஸ் என்பது ஒரு யூகம்தான்.. ஆனா பெரும்பான்மையான நேரங்களில் எங்க யுகம் சரியாதான் இருக்கும். ஒரு குழந்தை தான் வீட்டில் வளர்க்கப் படுகிற பெட்ட இமிடேட் பண்ணுறது ரொம்ப காமன். அதற்கு ரெண்டு காரணம் உண்டு. ஒண்ணு விளையாட்டா குழந்தைகள் அப்படிச் செய்யும். காலப் போக்குல அந்த பிகேவியர் மறைஞ்சிடும். ரெண்டாவது ஆட்டிசம்(Autism) .இது ரேர் கேஸ். ஆட்டிஸ்டிக் குழந்தைகள்கிட்ட தான் இவ்வளவு  ட்ராஸ்டிக்  சேஞ்சஸ் தெரியும்..சோ நகுலன் மஸ்ட் பீ…. ஆட்டிஸ்டிக்.”

மிஷா , “ஆனா சின்ன வயசில இருந்து அவன் ரொம்ப ஆக்டிவ்”

“அது அவன் வளர்க்கப்பட்ட சூழ்நிலை நல்லா  அமைஞ்சதால.. ஆட்டிஸ்டிக்  பெற்றோர்களுக்குப் பிறக்குற குழந்தைகள் ஆட்டிஸ்டிக்கா இருக்க வாய்ப்புகள் அதிகம்…ஆரம்பத்துல நிலவிய சூழ்நிலை நகுலனுக்கு ரொம்பப் பிடிச்சிருந்திருக்கு. அதனால அவன் ரொம்ப ஆக்டிவா இருந்திருக்கான். ஆனால் அவனோட பாதுகாப்பின்மை இந்த நாயினால் அதிகமாயிட்டதுனால அவனோட ஆட்டிஸ்டிக் பிகேவியர் வெளிப்படத் தொடங்கிடுத்து ..

முதல்ல நாய் மேல ஒரு காம்ப்ளெக்ஸ் டெவலப் ஆகியிருக்கு. அதனாலதான் அவன்  நாய இமிட்டேட் பண்ணியிருக்கான். அதுவே பொறாமையா மாறுனதால கொலை செய்யப் பார்த்திருக்கான். ஒரு கட்டத்துல, ஆட்டிஸ்டிக் பிகேவியர் அதிகமானதால அந்த நாயையே தன் பிம்பமா  கருத ஆரமிச்சுட்டான்.  அதனால …..” மிஷாவின் கலங்கிய கண்களைப் பார்த்தவாறே பேசிய டாக்டர் தொடர்ந்து பேசத் தயங்கினார்..

“அதனால, அவன் நாயா மாறிட்டுவரான் …அதான சொல்ல வரீங்க..” , வேகமாக வினவினார் ஆண்டே.”

“இல்ல அவன் ஏற்கனவே முழுசா நாயாக மாறிட்டான்” எடுத்துரைத்தார் டாக்டர். புயலுக்கு முன்னும் பின்னும் படரும் அமைதிபோல அங்கு சிறிது நேரம் நிலவிய அமைதியை ஆண்டேவின் தீனக் குரல் கலைத்தது, “அப்ப அந்த நாயப் பிரிச்சிட்டா,  he’ll be fine, right?”

“அந்தத் தப்ப மட்டும் செஞ்சிடாதீங்க.. நாய்க்கு எதாவது ஒன்னுனா குழந்தை ஏக்கத்திலேயே இறந்திடுவான். அவனப் பொறுத்த வரையில் நாய் என்ற பிம்பம்தான் உண்மை. அவன் இப்போ தனக்குத் தானே உருவாக்கிக்கொண்ட ஒரு உலகத்தில இருக்கான். அவன் குணமாகுற வரைக்கும் நாயையும் பத்திரமாகப் பாத்துக்கணும்”

“ப்ளீஸ் டூ சம்திங் டாக்டர்..எனக்கு அவன் நல்லபடியா வேணும்.” அழத் தொடங்கினாள் மிஷா.

“அவனோட ஆக்ரோசமான பிகேவியர மெடிகேசன் மூலம் கட்டுப்படுத்திடலாம். மத்தபடி அவனை நிஜ உலகிற்குக் கொண்டு வரவேண்டிய  பொறுப்பு உங்களுடையது. அவன் இப்போ தன்னைத்தானே நாய் என்று நினைச்சிக்கிட்டு இருக்கான். முதலில் அந்த பிம்பத்தை உடைக்கணும். வீட மாத்துறதெல்லாம் எந்தப் பயனும் தராது. நீங்க ரெண்டு பேரும் அவன் கூடவே இருக்கணும். உங்கள் ஸ்பரிசம் அவனுக்கு ரொம்ப முக்கியம். அவன தனியா எங்கயும் விடாதீங்க. ஒருத்தர் மாற்றி ஒருத்தர் தூக்கியே வச்சியிருங்க. உங்களோடையே தூங்கட்டும். அந்த நாயையும் அவன் பார்வையிலேயே வச்சிருங்க. கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கு விளங்கும், ‘நாய் என்ற பிம்பம் பொய், தான் நாய் என்ற எண்ணம் பொய்’. அவன் அந்த மாய உலகத்திலிருந்து வெளிய வந்திடுவான்.அதுக்கப்புறம் அவனுக்கு ஆட்டிஸ்டிக் பிகேவியர் இருந்தா, we will have different treatment for that. அவன் குணமாக சில வருடங்கள் கூட ஆகலாம். அவன் உருவாக்கிக்கொண்ட பிம்பம் உடையும் முன் நாய்க்கு ஏதும் நேரக் கூடாது, உங்க குழந்தை மேல வச்சிருக்க அக்கறைய நாய் மேலயும் வைக்கணும் “

டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு நகுலனைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.

இரவு நேரமாகிவிட்டது. அவர்களுக்கு எதுவும் சாப்பிடத் தோணவில்லை. காரை ஓரமாக நிறுத்திவிட்டு, நகுலனுக்கு மட்டும் உணவு வாங்கி வரச் சென்றார் ஆண்டே. அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டுவிட்டன. திறந்திருந்த ஒரு பேக்கரியில் இரண்டு கேக்குகளை வாங்கிவந்தார். அதை வாங்கிக் கொண்ட நகுலன் வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனையே பார்த்தவாறு அழுகையை அடக்கிக் கொண்டிருந்தாள் மிஷா. திடீரென நகுலன் கேக்கை நாக்கை வைத்து நக்கத் தொடங்கினான். தடுக்கச் சென்ற மிஷாவை தடுத்திட்டார் ஆண்டே. பாதி கேக்கைக் கீழே இறைத்து மீதியை அவன் தின்று முடித்ததும் கார் அங்கிருந்து நகர்ந்தது.

கார் பார்க்கிங்கில் ஓரமாக நகுலனின் நாய் படுத்திருந்தது. அதனைக் கடந்து அனைவரும் உள்ளே நுழைந்தனர்.வீட்டில் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நகுலனை நடுவில் படுக்க  வைத்து இருவரும் அவனை அணைத்தவாறே படுத்துக் கொண்டனர். படுத்தவுடனே உறங்கிவிட்டான் நகுலன். ஆண்டே மிஷாவால் உறங்க முடியவில்லை.

அவர்கள் மனதில் ஒரு கோடி எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. அவர்கள் இதுவரை மனதறிந்து யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. கடவுளின் இருப்பைக் குறித்தக் கேள்வி மீண்டும் மீண்டும் அவர்கள் மனதில் எழுந்தது. ‘நிச்சயம் கடவுள் என்று ஒன்று இல்லை. சிறு குழந்தை ஆட்டிவைப்பான் கடவுளாக இருக்க முடியாது. அவ்வாறான திருவிளையாடல்கள் யாருக்கும் தேவையில்லை. அப்படியே கடவுள் இருந்தால் அவன் ஒரு சாடிஸ்ட்டாகதான் இருக்கக் கூடும்’ தங்களுக்குள்ளே எண்ணிக் கொண்டனர். வெகு நேரம் விழித்தே கிடந்த அவர்கள் அதிகாலையில் தூங்கிப் போயினர். மிஷா விழித்துப் பார்க்கையில் நகுலன் அங்கு இல்லை.

பதறியடித்து ஆண்டேவை எழுப்பினாள்.வேகமாக வாசலை நோக்கி ஓடினர், இருவரும். கார் பார்க்கிங்கில் இருந்தான் நகுலன், நாயின் அருகினில். இரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு ,மற்றொரு காலைத் தூக்கி , நாக்கை வெளியே நீட்டி நாயை போல் குரைத்துக் காட்டினான் நகுலன்.

மிஷா கதறினாள் ஆண்டேவின் தோளில் சாய்ந்தவாறே. ஆண்டேவின் கண்களும் கலங்கியிருந்தன. அங்கே இரண்டு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன…..

 (மகாகவி இதழ், ஜனவரி 2014)

One thought on “நகுலனின் நாய்-சிறுகதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.