இந்தியாவில். சினிமா பேசும், சினிமாவை பற்றி பேசும் புத்தகங்கள் மிகக் குறைவு. அதுவும் தமிழில், சினிமாவை பற்றிய அறிவைபரப்பும் புத்தகங்கள் அதிகம் வந்ததில்லை. அந்தவகையில், ஆங்கிலத்தில் வெளிவந்த Conversation with Maniratnam என்ற மிக முக்கியமான இந்த புத்தகத்தை, தமிழில் கொண்டு வந்துள்ளது கிழக்கு பதிப்பகம்.
ஒரு படைப்பாளி தன்னுடைய இருபத்தியொரு படைப்புகளை பற்றியும், அவை உருவான பின்னணியை பற்றியும் இந்த புத்தகத்தில் மனம் திறக்கிறார். ஏன், எதற்கு, எப்படி என்பதை தாண்டி மிகவும் நுட்பமான கேள்விகளை தொடுத்து, மணிரத்னத்தின் விலாவாரியான பதில்களை பதிவு செய்துள்ளார் பரத்வாஜ் ரங்கன்.
ஏன் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ‘குடை’ வருகிறது, ஏன் அஞ்சலியில் கதாநாயகியின் ஆடை வெளிர் நிறத்தில் இருக்கிறது, ஏன் ஆயுத எழுத்தில் டைட்டில்ஸ் வேகமாக நகர்கிறது என்பன போன்ற சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில், ஒரு படத்தில், பாடல் காட்சிகளின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும், பாடல் இசை எப்படி இருக்க வேண்டும், casting எப்படி இருக்க வேண்டும், சரியான கேமரா கோணங்களை தேர்வு செய்வதன் மூலம் கதையை எப்படி திறம்பட சொல்லிடலாம், கதையை எப்படி அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வது என்பன போன்ற விஷயங்களையும் மணிரத்னத்தின் பதில்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை கொண்டுள்ள இந்த புத்தகம், திரைப்பட கலையை பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளவும் நிச்சயம் பயன்படும். சினிமாவை நேசிப்பவர்களுகும் சுவாசிப்பவர்களுகும் படிக்க வேண்டிய புத்தகம்…
இந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பினை எனக்கு அளித்த கிழக்கு பதிப்பகத்திற்கு மிக்க நன்றி..
மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்- சென்னை புத்தக கண்காட்சியில் கிழக்கு ஸ்டாலில்..