கடந்த ஆண்டு வெளியான லைஃப் ஆப் பை படத்திற்கும் இந்த ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிராவிட்டி படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நடுக்கடலில் தன்னந்தனியாக தத்தளிக்கும் சிறுவனை பற்றிய படம் லைஃப் ஆஃப் பை. விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம், கிராவிட்டி. இரண்டு படங்களுமே, தன்னம்பிக்கை இருந்தால் எத்தகைய ஆபத்தான சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றன. லைஃப் ஆப் பை பல ஆஸ்கார் விருதுகளை குவித்தது போல கிராவிட்டி படமும் வரவிருக்கும் ஆஸ்கார் விழாவில் ஏராளமான விருதுகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சயின்ஸ் பிக்ஷன் படம் என்றதும் புரியாத பல அறிவியல் கோட்பாடுகளை விவரித்து நம்மை குழப்புவார்கள் என எண்ணவேண்டாம். இது மிகவும் எளிமையான லீனியரான திரைப்படம். படத்தில் அறிவியல் கோட்பாடுகளை விட ஆன்மிக கருத்துக்களும், தத்துவங்களுமே அதிகம் இருக்கின்றன.
விண்வெளி வீரர் மாட் கௌலஸ்கி (ஜார்ஜ் க்லூனி) தன்னுடைய கடைசி விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட வேண்டும் என்று கனவுகண்டு கொண்டிருக்க, விண்வெளியில் ஏற்படும் விபத்தால் விண்கலம் பழுதாகிறது. அவரது குழுவில் இருக்கும் அனைவரும் இறந்து போக, அவரும் டாக்டர் ரியான் ஸ்டோன் (சாண்ரா புல்லக்) மட்டும் உயிர் பிழைக்கின்றனர். ரியான் ஸ்டோனிற்கு அது முதல் விண்வெளி பயணம். எப்படியாவது அங்கிருந்து தப்பித்துவிட வேண்டும் என இருவரும் முடிவுசெய்கின்றனர். ஒரு கட்டத்தில் யாராவது ஒருவர் தான் பிழைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட, மாட் தன் உயிரை தியாகம் செய்கிறார். இறுதியில் ரியான் ஸ்டோன் தனியாக போராடி பூமியை எப்படி அடைகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை. படத்தின் கதை முழுக்க விண்வெளியில், பூமிலிருந்து 600 கி.மீ உயரத்தில், நடக்கிறது. அங்கே எல்லாம் மிதந்துகொண்டே இருக்கின்றன. கதாபாத்திரங்களும் மிதக்கின்றனர். நேர்த்தியான, மிகவும் புதுமையான ஒளிப்பதிவின் மூலம் விண்வெளியில் மிதக்கும் உணர்வை பார்வையாளர்களுக்கும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.
முழு படத்தையும் தன் தோளில் சுமக்கிறார் படத்தின் கதாநாயகி சாண்ரா புல்லக். இரண்டு காட்சிகளில் மட்டுமே அவரின் முகத்தை தெளிவாக பார்க்க முடியும். மற்றபடி படம் முழுக்க ஸ்பேஸ் சூட் அணிந்தே நடித்திருக்கிறார். வெறும் வாய்ஸ் மாடுலேஷன் மூலமும், உடல் அசைவு மூலமும் விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணின் மனநிலையை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். முழு படத்தையும் ஒரு சிறிய கியூப் செட்டில் உருவாக்கியுள்ளனர். அதனால் ஒவ்வொரு நாளும் பத்து மணிநேரத்திற்கு மேல் அந்த கியூப் பெட்டிக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டுமாம். அவ்வளவு மெனக்கெட்டு அவர் சிறப்பாக நடித்திருப்பதனால் அடுத்த ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை அவர் வெல்வார் என பலரும் எதிர்பார்க்கின்றனர். படத்தின் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் க்லூனி மீண்டும் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்று நிரூபித்திருக்கிறார். கேலியாக பேசுவது தொடங்கி, ரியான் ஸ்டோனிற்கு மனதைரியம் ஊட்டும் வகையில் பேசுவது வரைக்கும், முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
இந்த படத்தை தத்ரூபமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக கிட்டதட்ட நான்கரை வருடங்கள் போராடியிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் அல்ஃபோன்சா கௌரான். இவர் தன் மகன் ஜோனா கௌரானுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். கிராவிட்டி தன்னுடைய கனவு திரைப்படம் என்று குறிப்பிடும் இவர், இந்த படத்திற்கென பிரத்தியேகமாக பல புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்தபடத்தின் மூலம் உலகின் தலை சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இவர் இடம்பிடித்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லையே !
படத்தின் மிக பெரிய பலம் ஒலிவடிவமைப்பு. டால்பி அட்மோஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்துள்ளனர். உண்மையில் விண்வெளியில் ஒலி இருக்காது. ஒரு பொருளை தொடுவதன் மூலம் எழும் அதிர்வலைகளின் மூலம் தான் சப்தத்தை உணர்ந்து கொள்ள முடியும். இதை கருத்தில் கொண்டு மிகவும் வித்தியாசமான முறையில் ஒலிவடிவமைப்பு செய்திருக்கிறார்கள். இந்த படத்தை முப்பரிமாண ஒளி-ஒலி தொழில்நுட்ப வசதி கொண்ட திரை அரங்கில் பார்த்தால் இந்த வித்தியாசத்தை உணரலாம். மேலும் டால்பி நிறுவனமும் இந்த படத்தின் மூலம் அதிக லாபம் அடைந்திருக்கிறது. கிராவிட்டி படம் பெரும் வெற்றிபெற்றுவிட்டதால், பல ஹாலிவுட் படைப்பாளிகள் தங்களின் படங்களில் அட்மோஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர்.
இது ஒருபுறமிருக்க, வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி படத்தை எடுக்காமல், பல தத்துவங்களையும் படத்தில் புகுத்தியிருக்கிறார் இயக்குனர். யாருக்காக ஒரு மனிதன் வாழ வேண்டும், மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறதா, என்பன போன்ற பல கேள்விகளுக்கு ரியான் ஸ்டோன் கதாபாத்திரம் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். மற்ற சயின்ஸ் பிக்ஷன் படங்கள் போல் வெறும் பிரம்மாண்டத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், தனிமை, நம்பிக்கை, அன்பு, பாசம் போன்ற விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு பலம்.
ஹாலிவுடில் பிரம்மாண்டமான படங்கள் பல எடுக்கப்பட்டாலும், வெகுசில படங்கள் மட்டுமே உலக அளவில் பிரபலமாகின்றன. உலக அளவில் ஒரு படம் கொண்டாடப் படவேண்டுமெனில், அந்த படத்தின் கதை அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கும்படி இருக்க வேண்டும். மேக்கிங்கும் அசாத்திய தரத்தில் இருக்க வேண்டும். டைட்டானிக், ஜூராசிக் பார்க், அவதார் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்தவகையில் இப்போது உலக சினிமாவில் இன்னொரு மைல்கல்லாக அமைந்துவிட்ட கிராவிட்டி ஆஸ்கார் பந்தயத்தில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ பலகோடி மக்களின் மனதை ஏற்கனவே வெற்றிக்கொண்டுவிட்டது.