உலகின் மிக பெரிய சூப்பர் ஹீரோவாக கருதப்படும் சூப்பர்மேன், முதன்முதலில் வில்லனாகதான் உருவாக்கப்பட்டார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம். 1933-யில், ஒரு ஆங்கில சிறுகதையில் வில்லனாக அறிமுகமான சூப்பர் மேன் மிக வேகமாக வளர்ந்து ஹீரோவான கதையை பார்க்கும் முன்பு, அண்மையில் வெளியான மேன் ஆப் ஸ்டீல் படத்தை பற்றி பார்த்துவிடுவோம்.
மேன் ஆப் ஸ்டீல், சூப்பர் மேனின் சாகசங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமன்று. அனைவரும் அறிந்த சூப்பர் மேன் வரலாற்றை புதிய பாணியில் சொல்லும் படம் இது. க்ரிப்டான் கிரகத்தை சேர்ந்த விஞ்ஞானி, ஜோர்-எல். க்ரிப்டான் அழியப் போகிறது என்று தெரிந்ததும், புதிதாக பிறந்த தன் குழந்தையை விண்கலத்தில் வைத்து வேறு கிரகத்திற்கு அனுப்பி விடுகிறார். அந்த குழந்தை பூமியை வந்து அடைகிறது. அந்த குழந்தையை எடுத்து வளர்க்கும் கென்ட் தம்பதியர், அந்த குழந்தைக்கு கிளார்க் கென்ட் என்று பெயரிடுகின்றனர். தன்னிடம் அசாதாரணமான சக்தி இருப்பதை கிளார்க் உணர்ந்துகொள்கிறான். தன் வளர்ப்பு தந்தையின் மூலம், தான் யார் என்ற உண்மையை அவன் தெரிந்துகொள்கிறான். இந்நிலையில் க்ரிப்டான் கிரகத்தின் வில்லனான, ஜெனரல் ஜாட் கிளார்க்கை கொள்ள பூமிக்கு வருகிறான். கிளார்க், எப்படி அந்த வில்லனை வென்று சூப்பர் மேனாக உருவாகிறான் என்பதை விளக்குகிறது இந்தப்படம்.
பிரபல இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன், இந்த படத்தின் கதாசிரியர்களில் ஒருவர். பேட் மேன் கதாபாத்திரத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இவர்தான். அதே போல் சூப்பர் மேன் கதாபாத்திரத்தையும் நவீனமாக உருவாக்கியுள்ளார். படத்தில் அவரது ‘டச்’ நிறைய இருக்கிறது. திரைக்கதையை நான் லீனியர் முறையில் சொல்லியிருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது. இருந்தும் படத்தில் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
வெறும் சூப்பர் மேனின் சாகசங்களை மட்டும் இந்த படத்தில் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். சூப்பர் மேன் கதாபாத்திரத்தை உலகிற்கு மீண்டும் அறிமுக படுத்துவதே இந்த படத்தின் முக்கிய நோக்கம். அதனால், அவரது சாகசத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. ஆனால் நிச்சயம் புதிய பரிமாணத்தில் இன்னும் சில சூப்பர் மேன் படங்கள் வருங்காலத்தில் வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.
1933-ஆம் ஆண்டு ஜெர்ரி, ஜோ என்ற இரண்டு நண்பர்களால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரமே ‘சூப்பர்மேன்’. அவர்கள், தி ரெயின் ஆப் சூப்பர்மேன் (The Reign of Superman) என்ற சிறுகதையில் ‘சூப்பர் மேன்’ என்றொரு வில்லனை உருவாக்கினார்கள். அவன் உலகத்தையே கட்டி ஆள முயல்கிறான். அந்த கதாபாத்திரம் அதிகம் பேசப்படாததால், அவனை ஹீரோவாக மாற்றி, 1938 ஆம் ஆண்டு முதல் சூப்பர் மேன் காமிக்கை வெளியிட்டார்கள். அன்றுமுதல் இன்றுவரை, 75 வருடங்களாக உலக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ‘சூப்பர் ஹீரோ’ சூப்பர்மேன்.
தொடக்கத்தில் சூப்பர் மேனும் ராபின் ஹூடை போல ஒரு சாதாரண கதாபாத்திரம் தான். சட்டத்துக்கு கட்டுபடுவதை விட, நியாயத்திற்க்கு கட்டுப்படுவதை தான் அவர் விரும்புவார். சூப்பர்மேனை உருவாக்கிய ஜெர்ரி, ஜோ ஆகியோர் இடது சாரிகள் என்பதால், ஆரம்ப கால சூப்பர் மேனும் இடது சாரியாகவே இருந்தார். மேலும் அவரிடம் பறக்கும் சக்தி இருக்கவில்லை. பின், 1940-யில் லெக்ஸ் லூத்தர் என்ற வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள். அவர்தான் சூப்பர்மேனின் பிரதான எதிரி. மிக திறமையான இந்த வில்லன் கதபாத்திரத்தை உருவாக்கிய பின்தான், சூப்பர் மேனையும் அசாதாரணமான வீரனாக உருவாக்கினார்கள். சூப்பர் மேனுக்கு பறக்கும் சக்தி உட்பட பல சக்திகள் வந்தன. இப்படி மிக பிரபலமாக, காமிக் உலகில் வளர்ந்து வந்த சூப்பர் மேனை 1992-ஆம் ஆண்டு கொன்றுவிட்டார்கள். அதற்கு வாசகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, மீண்டும் சூப்பர்மேன் உயிர்த்தெழுந்தார்.
காமிக் உலகை பல ஆண்டு காலம் ஆண்ட சூப்பர் மேன், 1951-ஆம் ஆண்டு ‘சூப்பர் மேன் அண்ட் மோல் மென்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். வெறும் ஐம்பத்தெட்டு நிமிடம் மட்டும் ஓடும் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஜார்ஜ் ரீவ்ஸ். ஆனால் முதல் முழு நீள சூப்பர்மேன் படம் 1978-ஆம் ஆண்டுதான் வெளியானது. ‘சூப்பர்மேன்’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் சூப்பர்மேனாக கிரிஸ்டோபர் ரீவ்ஸ் நடித்திருந்தார். இன்றளவும், சூப்பர்மேன் கதாபாத்திரம் என்றதும் உடனே நினைவுக்கு வரும் நடிகர் இவர்தான். இவர் மொத்தம் நான்கு படங்களில் சூப்பர் மேனாக நடித்திருக்கிறார். இவர் நடித்து 1987 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்மேன் நான்காம் பாகம் சரியாக ஓடாததால், கிட்டதட்ட இருபது வருடங்கள் சூப்பர்மேனை நம்மால் சினிமாவில் பார்க்கமுடியவில்லை. 2006-யில், சூப்பர்மேன் ரிடர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார் சூப்பர்மேன். அந்த படத்தின் வெற்றி தந்த நம்பிக்கையில், மேன் ஆப் ஸ்டீல் படத்தை எடுத்துள்ளனர். மேன் ஆப் ஸ்டீல் படத்தில் நவீன சூப்பர்மேனாக வாழ்ந்திருப்பவர் ஹென்றி காவில்.
இதற்கிடையில் 1984-யில் சூப்பர்கேர்ள் என்றொரு படமும் வந்தது. ஆனால் படம் சரிவர ஓடவில்லை. சூப்பர் மேன் படங்களிலேயே அதிக நஷ்டத்தை சந்தித்த படமும் இதுதான். இதுவரை வெளிவந்த சூப்பர் மேன் படங்களில் வசூலை வாரி குவித்த படம் 1978-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சூப்பர்மேன்’ என்ற படமே. சூப்பர் மேன் ரிடர்ன்ஸ் என்ற படமும் பெரிய அளவில் லாபம் ஈட்டியது. இந்த சாதனையை மேன் ஆப் ஸ்டீல் நிச்சயம் முறியடித்துவிடும். அந்த அளவிற்கு மேன் ஆப் ஸ்டீல் பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போடுகிறது.
சூப்பர் மேன் கதாபாத்திரத்தை கடவுளின் வடிவமாக கருதுபவர்களும் அமெரிக்காவில் இருகிறார்கள். பொதுவாக, சூப்பர் மேன் யாரையும் கொலை செய்ய மாட்டார். ஆனால், மேன் ஆப் ஸ்டீல் படத்தின் இறுதியில் வில்லனை கொன்று விடுகிறார். இதனால், சூப்பர் மேனின் புனித தன்மை கெட்டுவிட்டதாக பலர் எதிர்ப்பு குரல் எழுப்புகின்றனர்.
என்னதான் சூப்பர் மேன் அமெரிக்காவின் கலாசார சின்னமாக கருதப்பட்டாலும், சூப்பர்மேன் படங்களில் நடிக்க பலர் தயங்குகின்றனர். சூப்பர் மேன் படங்களில் நடிப்பவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேரும் என்றொரு நம்பிக்கை நிலவுவுவதே அதற்கு முக்கிய காரணம். சூப்பர் மேனாக நடித்த பலர் அகால மரணம் அடைந்துள்ளனர். ஜார்ஜ் ரீவ்ஸ் குண்டடி பட்டு இறந்தார். கிறிஸ்டோபர் ரீவ்ஸ், குதிரையில் இருந்து கீழ் விழுந்து பாரலைஸ் ஆகி இறந்தார். இதெல்லாம் மூட நம்பிக்கை என்கிறார் சூப்பர்மேன் ரிடர்ன்ஸ் படத்தில் நடித்த பிராண்டன் ரூத்.
எது எப்படி இருந்தாலும், உலகின் மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கெல்லாம் முன்னோடியான சூப்பர் மேனுக்கு மவுசு என்றுமே குறையாது என்பதற்கு சான்றுதான் மேன் ஆப் ஸ்டீல் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்ப்பு. இந்த படம், டேவிட் கோயர், நோலன், ஜாக் ஸ்னைடர் போன்ற பல பிரபல படைப்பாளிகளின் தனித்திறமையால் உருவானது. அவர்கள் இணைந்து சூப்பர்மேனுக்கு நவீன வடிவம் கொடுத்திருக்கிறார்கள். சூப்பர்மேனின் ஆடையையும் மாற்றி வடிவமைத்திருக்கிறார்கள். அதனால் இன்னும் தரமான சூப்பர் மேன் படங்களை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம். இரண்டு தலைமுறைக்கு மேல் ஆட்சி செய்து வரும் சூப்பர்மேன், அடுத்த தலைமுறையை கட்டி போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.