உலகிலேயே அதிக படங்கள் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு சீனா. அமெரிக்காவும் இந்தியாவும் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. சீனாவில் படைப்பு சுதந்திரம் குறைவு என்பதால், சீன ரசிகர்களின் எதிர்பார்ப்பை சீன படைப்பாளிகளால் பூர்த்திசெய்ய முடியவில்லை. அதனால் சீனர்கள் ஹாலிவுட்டை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். விளைவு, சீனாவில் ஆண்டுக்கு பல நூறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், சீனா அதிகம் கல்லாக் கட்டுவது ஹாலிவுட் படங்களின் மூலமே..
1960-களில் சீனாவில் நடந்த கலாச்சார புரட்சியின் விளைவு, அங்கு பெரும்பாலான பழைய சீன படங்கள் தடை செய்யப்பட்டது. வெளிநாட்டுப் படங்களை சீனாவில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டது. புதிதாக எடுக்கப்படும் படங்களுக்கும் நிறைய கட்டுபாடுகள் விதிகப்பட்டது. 1980-களுக்கு பின் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. திரைப்படத்துறையின் மீது இருந்த கட்டுபாடுகள் தளர்ந்தன.
1994-யில் ஹாலிவுட் படங்களுக்கு சீனாவின் கதவு மீண்டும் திறக்கப்பட, அன்று முதல் இன்று வரை டைட்டானிக், அவதார், அயன் மேன், லைஃப் ஆஃப் பை என பல பிரபலமான அமெரிக்கப் படங்கள் சீன மொழியில் வெளியாகி வருகிறது. இதன்மூலம் அமெரிக்கா சீனா இரண்டுமே பல ஆயிரம்கோடி வருமானம் ஈட்டுகிறது.
ஆண்டொன்றுக்கு சீனாவில் 34 அந்நியப் படங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த 34 படங்களில் தங்கள் படமும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று பிரபல ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்கள் ஒவ்வொன்றும் போட்டி போடுகின்றன. ஆனால் எந்த வெளிநாட்டு படமாக இருந்தாலும், சீனத் திரைப்பட தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்யப் பட்ட பிறகுதான் சீனாவில் வெளியிட முடியும். அதில் அவர்கள் வன்முறை காட்சிகள், கோரக் காட்சிகள், சீனர்களுக்கு எதிரான காட்சிகள் என சீனாவிற்கு ஒவ்வாத காட்சிகள் எது இருந்தாலும் நீக்கி விடுவார்கள்.
அமெரிக்கத் தணிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் க்வெண்டின் டரண்டினோ போன்ற இயக்குனர்கள் கூட, சீனாவின் தணிக்கைக் குழுவிற்கு கட்டுப்பட்டு செல்கிறார்கள். டரண்டினோவின் சமீபத்திய படமான ஜாங்கோவின் சீன மொழிப்பெயர்ப்பில் பல வன்முறை காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன.
இன்றளவும் சீனர்களை வில்லன்களாகவும், சீனாவை சாத்தான்களின் பூமியாகவும் சித்தரிக்கும் ஹாலிவுட் படங்கள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறான படங்களை சீனாவில் எப்படி வெளியிடுவது? அதற்கும் வழி வந்துவிட்டது. பல கோடிகளை இறைத்து, நவீன தொழில்னுட்பத்தின் உதவியுடன் படத்தில் இடம்பெறும் சீன வில்லன்களை கொரியன் வில்லன்கள் போல் மாற்றிவிடுகின்றனர். கடந்த ஆண்டு வெளியான ரெட் டான் (Red Dawn) திரைப்படத்தில் ஹாலிவுட் இதனை செய்தது. கிராபிக்ஸில் எல்லாமே சாத்தியமாகிவிடுகிறது. பின் சீனாவின் ஒப்புதலோடு அந்த படங்களை அங்கே வெளியிடுகின்றனர்.
உலகத்திலேயே அதிக படங்களை தயாரிக்கும் அமெரிக்கா, பாக்ஸ் ஆபிசில் முதல் இடம் வகிக்கும் அமெரிக்கா, ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்ற கேள்வி எழலாம். அமெரிக்காவில் எடுக்கப்படும் படங்கள் வெறும் அமெரிக்க பாக்ஸ் ஆபிசை மட்டுமே நம்பினால், லாபம் பார்க்க முடியாது. ஒரு நாட்டில், திரைப்பட டிக்கெட்களை விற்பதன் மூலம் வரும் வருவாயே பாக்ஸ் ஆபிஸ் எனப்படுகிறது.
உலக பாக்ஸ் ஆபிசில் சீனா இரண்டாம் இடம் வகிக்கிறது. இதற்க்கு முன் இரண்டாம் இடம் வகித்த ஜப்பான், இப்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்ப்பட்டுவிட்டது. அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் பாக்ஸ் ஆபிசை குறிவைத்தே ஹாலிவுட் சீனாவிற்கு கட்டுப்பட்டு செல்கிறது. 2.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன பாக்ஸ் ஆபிசை அமெரிக்கா இழக்கத் தயாராக இல்லை.
மேலும், பல ஹாலிவுட் படங்கள் அமெரிக்காவை விட சீனாவில் அதிக வருமானம் ஈட்டுகிறது. ஹாலிவுட் இயக்குனர் கேமரூனுக்கு சீனாவில் ரசிகர்கள் அதிகம். அவர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற டைட்டானிக் முப்பரிமான வடிவம்பெற்று கடந்த ஆண்டு சீனாவில் வெளியிடப்பட்டது. உலகளவில், டைட்டானிக்-3D ஈட்டிய லாபத்தில் பெரும்பங்கு சீனாவில் இருந்துதான் வந்தது.
டைட்டானிக்கை விட அவதார் சீனர்களை சற்று அதிகமாகவே கவர்ந்துவிட்டது எனலாம். சீனாவின் ஜாங்க்ஜியாஜி (Zhangjiajie) தேசிய பூங்காவில் உள்ள மலை ஒன்றிற்ற்கு, ‘அவதார் மலை’ என பெயர் வைக்கும் அளவிற்கு அவதார் அங்கே சக்கை போடு போட்டது.
சீனர்களின் இந்த ஹாலிவுட் மோகத்தை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. அதனால்தான் சீனர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்குவது மட்டுமல்லாமல், சீனர்களை கவர்வதற்கென்றே பிரத்யேகமாக காட்சிகளை சேர்க்கவும் செய்கிறார்கள். சமீபத்தில் வெளியான அயன் மேன்-3 சீன வெளியீட்டில், பிரபல சீன நடிகை பான் பிங்பிங்கை சிறு வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். மேலும் சீன நடிகர் வாங் நடித்த காட்சிகளையும் நீட்டித்துள்ளனர். இவை முழுக்க முழுக்க சீன ரசிகர்களை கவர்வதற்காக செய்யப்பட்ட ஒன்று. அமெரிக்க வடிவத்தில் பான்பிங்பிங் நடித்த காட்சிகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவை ஒரு புறம் இருக்க, சீன மொழியிலும் சில தரமான படங்கள் எடுக்கப்பட்டாலும் அவை உலக அளவில் பெரிதாக கவனிக்க படவில்லை. சீனாவில் நிறைந்திருக்கும் கட்டுப்பாடுகளே அதற்கு முக்கிய காரணம். இப்போது சீனாவில் அமெரிக்க படங்களை அனுமதிப்பதன் மூலம், சீனபடங்கள் உலக அளவில் கொண்டு செல்லப்படும் அமெரிக்க நிறுவனங்களின் மூலம். இது சீன சினிமாவையும் உலக அளவில் பேச வைக்கும்.
இந்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது மட்டும் ஏன் ஹாலிவுட் இவ்வளவு பிரயத்தனப்படுகிறது ? நம்ம ஊர் பர்மாபஜார் போல் சீனாவிலும் டி.வி.டி மார்கெட் உண்டு. அங்கே எல்லா பிரபலமான ஹாலிவுட் படங்களும் சப்டைட்டில்களோடு கிடைக்கிறது. அதை பல கோடி மக்கள் விரும்பி வாங்குகின்றனர். எவ்வளவு முயன்றும் இதனை தடுக்கமுடியவில்லை. திருட்டு டி.வி.டிகளின் மூலம் யாரோ சிலர் லாபம் அடைவதைவிட , ஹாலிவுட்டே படத்தை நேரடியாக வெளியிட்டால் பல்லாயிரம் கோடி லாபம் பார்க்கலாம். அதனால் தான் ஹாலிவுட் இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கிறது. சீனாவின் தணிக்கை குழு என்ன சொன்னாலும் தலையாட்டுகிறது.
ஹாலிவுட் மட்டும் அல்ல, பாலிவுட் படங்களுக்கும் சீனாவில் மவுசு கூடியுள்ளது. 3 இடியட்ஸ் படம் அங்கே சூப்பர் ஹிட். ராக்ஸ்டார் திரைப்படம் தாய்வான் டி.வி.டி மார்கெட்டில் மிகப்பிரபலம். இந்திய சீன அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை தாண்டி பாலிவுட் சீனாவில் எவ்வாறு ஜொலிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சீனா இவ்வளவு வேகமாக பாக்ஸ் ஆபிசில் வளர்ந்தால், சீனவிற்க்கென்று படங்களின் காட்சிகள் மாற்றப்படும் காலம் மறைந்து, சீனவிற்க்கென்றே பிரத்யேகமாக படங்களை தயாரிக்கும் காலம் விரைவில் வந்திடும். உலகத் திரைப்படத்துறையை சீனாவே கட்டுப்படுத்தும் காலமும் வரலாம். ‘Made in china’ முத்திரையோடு படங்கள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை…