நன்றி, ஆழம். ஏப்ரல் 2013
இதுவரை இல்லாத அளவிற்கு ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தாண்டு எதிர்பார்ப்பு அதிகமாயிருந்தது. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் இதற்க்கு முன் ஆஸ்கார் விருதுகளை வாங்கியவர்கள் என்பதே அதற்க்கு காரணம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து படங்களும் ஏதோ ஒருவகையில் சிறந்த படங்கள் எனினும், சில படங்கள் அதிக பாராட்டுகளைப் பெற்றது. அவை இங்கே..
ஆர்கோ (ARGO)
சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்கோவை இயக்கியர் பென் அஃப்லெக். இந்தப்படத்தின் கதாநாயகனும் இவரே. நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்ட இவர், இதற்க்கு முன் ‘குட் வில் ஹன்டிங்’ என்ற படத்திற்காக சிறந்த திரைக்கதையாசிரியர் விருதை வாங்கியுள்ளார். ஆர்கோ ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டது. 1979-ஆம் ஆண்டு ஈரானில் புரட்சி வெடிக்கிறது. அங்கிருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆறு அமெரிக்கர்கள் ஈரானிலேயே பதுங்கிக்கொள்கிறார்கள். அவர்களை தன் புத்தி சாதுரியத்தால் அங்கிருந்து தப்பிக்க வைக்கிறார் கதாநாயகன். அமெரிக்க உளவுத்துறை அதிகாரியான கதாநாயகன், தான் ஒரு திரைப்பட இயக்குனர் என்று கூறிக்கொண்டு ஈரானுக்குள் நுழைகிறார். ஈரான் போராளிகளை நம்பவைத்து, அந்த ஆறு அதிகாரிகளையும் மீண்டும் அமெரிக்காவிற்கு எவ்வாறு அழைத்து வருகிறார் என்பதே படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை. ஆர்கோ படத்திற்காக தத்ருபமாக காட்சிகளை எழுதி சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை பெற்று விட்டார் திரைக்கதையாசிரியர் கிறிஸ் டெர்ரியோ. சிறந்த படத்தொகுப்புகான விருதும் ஆர்கோ படத்திற்கே கிட்டியது.
ஜாங்கோ அன்செயின்ட் (Django Unchained)
சமகால உலக சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை க்வெண்டின் டரண்டினோ. ஹாலிவுட் திரைக்கதை உத்திகளை தன் படங்களின் மூலம் உடைத்து எறிவது இவர் வழக்கம். ஜாங்கோ படத்தை எழுதி இயக்கிய இவருக்கு இப்படத்திற்காக சிறந்த திரைக்கதையாசிரியர் விருது கிட்டியுள்ளது. பத்தொம்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நிலவிய அடிமை வர்த்தகத்தை பற்றிய கதை இது. கருப்பின மக்கள் அமெரிக்கர்களால் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அதில் ஒரு அடிமையான ஜாங்கோவை விடுவிக்கிறார் ஜெர்மனிய பல்மருத்துவர் கிறிஸ்டோபர். சில வில்லன்களை பழிவாங்க ஜாங்கோ தனக்கு உதவினால், ஜாங்கோவின் காதலியை அமெரிக்கர்களிடமிருந்து மீட்டுதருவதாக வாக்களிக்கிறார் கிறிஸ்டோபர். இருவரும் வில்லன்களை தேடி புறப்படுகின்றனர். வழியெங்கும் உருவெடுக்கும் பிரச்சனைகளை சேர்ந்து சமாளிக்கின்றனர். இறுதியில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களே மீதிக்கதை. கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்த கிறிஸ்டோப் வால்ட்ஸ் சிறந்த துணைநடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அமெரிக்கர்கள் மறைக்க முயலும் ஒரு கருப்பு சரித்திரத்தையே தான் கற்பனை கலந்து படமாக்கிருப்பதாகவும், இப்படம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் டரண்டினோ கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
லைஃப் ஆஃப் பை (Life of pi)
எதிர்பார்த்ததை போன்றே ‘லைஃப் ஆஃப் பை’ அதிக விருதுகளை குவித்துவிட்டது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குனர், சிறந்த visual effects, சிறந்த இசை என நான்கு விருதுகள் இத்திரைப்படத்திற்கு கிட்டியுள்ளது. ஒரு படகில் ஒரு புலியுடன் கடலின் மத்தியில் மாட்டிக்கொள்ளும் பை என்ற சிறுவனின் போராட்டமே இப்படத்தின் கதை. யான் மார்டல் எழுதிய நாவலை தழுவி இதனை படமாக இயக்கியிருப்பவர் ஆங்லீ. லைஃப் ஆஃப் பை நாவலை படமாக எடுக்க பலர் தயங்கினர். ஏனெனில், இக்கதை மிகவும் வித்தியாசமானது. வெறும் ஒரு சிறுவனையும் புலியையும் வைத்துக்கொண்டு எப்படி சுவாரஸ்யமான படம் எடுப்பது என்ற அச்சம் பல பெரிய இயக்குனர்களுக்கு இருந்தது உண்மை. ஆனால் ஆங் லீ அந்நாவலை சிறந்த படமாக இயக்கி சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுவிட்டார். இது இவருக்கு இரண்டாவது ஆஸ்கார். இதற்கு முன் ப்ரோக் பேக் மௌன்டைன் என்ற படத்திற்கு சிறந்த இயக்குனர் விருதை பெற்ற இவர், ஆசியாவிலேயே ஆஸ்கார் விருதை பெற்ற ஒரே இயக்குனர் என்பது குறிப்பிடத்ததக்கது.
சில்வர் லைனிங்ஸ் ப்லேபுக் (Silver Linings Playbook)
மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களை, எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் ஜெயிப்பது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லிய படம் இது. ‘பைபோலார் டிஸார்டர்’ என்ற ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பேட் மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார். எட்டு மாதத்திற்கு பின் மனநல காப்பகத்தில் இருந்து வெளியே வரும் பேட், மீண்டும் தன் மனைவி நிக்கியுடன் சேர்ந்து வாழ முயற்சி செய்கிறார். ஆனால் நிக்கியை கண்டுபிடிக்க முடியவில்லை. அடிக்கடி ஆக்ரோஷமான மனநிலைக்கு சென்றுவிடும் பேட்டுடன் சேர்ந்து வாழ நிக்கிக்கு உடன்பாடு இல்லை. அதனால் நிக்கியை பேட் சந்திக்கக்கூடாது என்று கோர்ட் தடை விதித்துவிட, நிக்கியிடம் பேச நிக்கியின் தோழி டிஃபானியின் உதவியை நாடுகிறார் பேட். இதற்க்கிடையே டிஃபானி பேட்டை காதலிக்க தொடங்கிவிடுகிறார். இறுதியில் யார் யாரோடு இணைந்தார்கள் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக விவரித்திருக்கும் படம் இது. தலை சிறந்த நடிகர் ராபர்ட் டி நிரோ தொடங்கி இந்திய நடிகர் அனுபம் கேர் வரை பெரிய ஸ்டார் பட்டாளமே படத்தில் உண்டு. டிஃபானி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜெனிபர் லாரன்ஸ் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றார்.
லிங்கன் (Lincoln)
அமெரிக்காவின் முன்னால் பிரதமர் ஆபிரகாம் லிங்கனின் கடைசி நான்கு மாத வாழ்க்கையை பற்றிய படம் ‘லிங்கன்’. கறுப்பின மக்களை அடிமைகளாக நடத்தும் முறையை முழுவதுமாக ஒழிக்கும் பொருட்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதிமூன்றாவது சட்டதிருத்தம் கொண்டு வர லிங்கன் போராடுகிறார். சட்டத்திருத்தம் கொண்டுவர எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிகின்றன. சிலர் உடனிருந்தே குழி பறிக்க முயல்கின்றனர். அனைவரின் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு, இறுதியில் பெரும்பான்மையினரின் ஆதரவோடு சட்டத்திருத்தத்தை கொண்டுவருகிறார் லிங்கன். இப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். லிங்கனாக நடித்திருப்பவர் டேனியல் டே லெவிஸ். தன் ‘Method acting’ திறமை மூலம் இவர் லிங்கனாகவே வாழ்ந்து, சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்று விட்டார். லிங்கன் ஒரு பீரியட் திரைப்படம். இப்படத்தின் கலை இயக்குனர்கள் தத்ரூபமாக கலை வடிவம் கொடுத்திருந்ததனால், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருதும் லிங்கன் திரைப்படத்திற்க்கே கிடைத்துள்ளது.
தி மிசெரபில்ஸ் (Les Miserables)
இது ஒரு ம்யுசிகல் திரைப்படம். ம்யுசிகல் எனில், படத்தில் இசை ஒரு முக்கிய அங்கம் வகிக்கும். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் வசனங்களை பேசமாட்டார்கள். பாடுவார்கள். விக்டர் ஹுகோவின் ‘Les Miserables’ என்ற பிரெஞ்சு நாவலை, தழுவி அதே பெயரில் இயற்றப்பட்ட இசைநாடகம் மிக பிரபலம். அந்த இசை நாடகத்தை தழுவி படமாக எடுத்திருக்கின்றனர். பத்தொன்பது வருடம் சிறையில் இருந்துவிட்டு பரோலில் வெளியே வருகிறார் கதாநாயகன். திருடன் என்றும் திருடனாகத்தான் இருப்பான் என்ற முன்முடிவோடு அவரையே துரத்திக்கொண்டிருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. கதாநாயகன் செல்லும் இடமெல்லாம் பின்தொடர்கிறார் அதிகாரி. திருந்தி வாழும் கதாநாயகன் ஃபாண்டின் என்ற பெண்ணுக்கு உதவுகிறார். அவளது மரணத்திற்கு பின் அவளின் பெண்ணை தத்தெடுத்துக்கொள்கிறார். பிறருக்கு உதவும் குணம் கொண்ட கதாநாயகனை அனைவரும் மதிக்கிறார்கள், அந்த போலீஸ் அதிகாரியை தவிர. கதாநாயகனுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் போரட்டத்தில் யார் வெற்றிபெற்றார்கள் என்பதை பிரெஞ்சு புரட்சியின் பின்னனியில் சொல்லியிருகின்றனர். மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம், எட்டு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு மூன்று விருதுகளை வென்றது. சிறந்த துணை நடிகைக்கான விருதை ஃபாண்டின் கதாபாத்திரத்தில் நடித்த ஆனா ஹாத்வே பெற்றார். சிறந்த ஒப்பனை, சிறந்த சவுண்ட் மிக்ஸிங் விருதும் இப்படத்திற்க்கே கிட்டியது.
ஸ்கைஃபால் (Skyfall)
பாண்ட், ஜேம்ஸ் பாண்ட் மீண்டும் கலக்கிய படம். தொலைந்து போன ஹார்ட் டிஸ்க்கை பாண்ட் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை. இதுவரை பாண்ட் கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர்களை விட இப்படத்தில் டேனியல் கிரேக் சிறப்பாக நடித்திருந்தார். சிறந்த ஒளிப்பதிவிற்க்கான விருது இப்படத்திற்கு பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் ரயில் பெட்டிகள், நீர் நிலைகள் என பல மூளை முடுக்குகளில் புகுந்து மிகவும் திறம்பட ஒளிப்பதிவு செய்திருந்தார். எனினும் ‘லைஃப் ஆஃப் பை’ படத்தின் ஒளிப்பதிவு சற்று அதிக சவால் நிறைந்தது என்பதால் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்காக ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டா தட்டி சென்றுவிட்டார். சிறந்த பாடலுக்கான விருது ஸ்கைஃபால் படத்தில் இடம்பெற்ற “ஸ்கைஃபால்” என்ற பாடலுக்கு கிட்டியது. ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் தாலாட்டு பாடலை பாடிய இந்திய பாடகி பாம்பே ஜெயஸ்ரீயும் இந்தவிருந்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.ஆனால் பாண்ட் வென்றுவிட்டார். சிறந்த சவுண்ட் எடிட்டிங்க்கான விருதும் ஸ்கைஃபால் படத்திற்கே கிட்டியது.
அமூ (Amour)
சிறந்த அந்நிய மொழி திரைப்படத்திற்க்கான விருதை இந்தமுறை பெற்றது, அமூ என்ற பிரெஞ்சு திரைப்படம். ‘Amour’ என்ற பிரெஞ்சு சொல்லிற்கு காதல் என்று பொருள். காதலுக்கு வயதில்லை என்பதிற்கிணங்க, வயதான தம்பதியின் காதலை கவித்துவமாக சொல்கிறது இத்திரைப்டம். என்பது வயதை கடந்த ஜார்ஜ்-ஆனா தம்பதியரின் வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருக்கிறது, திடிரென ஒரு நாள் ஆனாவின் உடல் நலம் குன்றிப் போய் வாழ்க்கை முழுவதும் படுக்கையிலேயே கழிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இறந்துக் கொண்டிருக்கும் மனைவியை ஜார்ஜ் எப்படி பராமரிக்கிறார் என்பதே மீதிக் கதை. முழுக்க முழுக்க ஒரு வீட்டினுள்ளேயே இக்கதை நகர்கிறது. மனைவியின் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கும் ஒரு கணவனின் காதலை இதைவிட உணர்ச்சிபூர்வமாக யாராலும் சொல்லிவிடமுடியாது.
மொத்தத்தில், இந்த முறை ஆஸ்கார் வென்ற ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையை சார்ந்தவை. அவற்றில் பல, மிக பிரம்மாண்டமான படங்கள்.விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பலரும் மிகவும் திறமைசாலிகள். ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிலருக்கு விருது கிடைக்காதது ஆச்சர்யத்தை அளித்தது. அடுத்த ஆஸ்கார் என்னென்ன ஆச்சர்யங்களை ஒளித்துவைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.