நான் ஒரு கதை சொல்லி
ஆழ் கடல் பொங்கி
உயிர்களை விழுங்கி
உலகம் எரிந்து
உறவுகள் பிரிந்து
நாகரிக உலகம்-
பின்நோக்கி சுழன்று
சமகால மனிதன்
நிர்வாண மனிதனாய்-
மீண்டும் உருமாறி
நரமாமிசம் தின்று
அக்றிணை உயர்திணை அனைத்தும்
அழிந்து,வெந்து போனாலும்
எனக்கு மரணமில்லை
ஏனெனில்
நான் ஒரு கதை சொல்லி
காலங்கள் மாறலாம்
காட்சிகள் மாறலாம்
கதைகள் மாறிடா !
கதை சொல்லியின் புகழ்
அழிந்திடா !
கதைகளே உலகியலுக்கு
அடிப்படை.
கடவுளர் கதை
காதலர் கதை
யோக கதை
போக கதை
பேய் கதை
புதையல் கதை
புனர்ஜென்மக் கதையென
ஏதோ ஒரு கதை
அன்று தொட்டு இன்று வரை
அழியாமல் தொடர்ந்துகொண்டிருக்க,
அக்கதையை சொல்லிய
கதை சொல்லிகள் அந்த கதைகளோடு
இணைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிரார்கள்…..
நான், என்ற இந்த பயனற்ற வெற்றுடல்
அழிந்து போனாலும்
நான் சொல்லிய கதைகள் அழிந்திடா.
ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடினாலும்
எவனோ ஒருவன் என் கதைகளை
சொல்லிக்கொண்டிருப்பான்
புது மெருகுடன்…
அந்த கதைகளில் ஏதோவொரு உருவில்
நான் வாழ்ந்துகொண்டிருப்பேன்,
பழைய கதை சொல்லிகள்
என் கதைகளில் வாழ்ந்துக்கொண்டிருப்பதைப் போல…
கடவுளே அழிந்தாலும்
கதை சொல்லி நான் அழிவதில்லை.
ஏனெனில்
கடவுளை வார்தெடுத்தான் ஒரு
கதை சொல்லி
கதைகளை சொல்லி.
கடவுளை வளர்தெடுத்தான் ஒரு
கதை சொல்லி
கதைகளை சொல்லி.
கடவுளின் கதைகளை
கட்டுக் கதைகளாக்கிட,
புதுக்கதைகள் தேவை.
அதற்கோர் கதை சொல்லி தேவை.
கட்டுக்கதைகளை வரலாற்றில்
புகுத்திட
தனிக்கதைகள் தேவை.
அதற்கோர் கதை சொல்லி தேவை.
நம்பிக்கையை விதைப்பதற்கும்
கதை சொல்லி தேவை
நம்பிக்கையை உடைப்பதற்கும்
கதை சொல்லி தேவை.
மனிதனை படைத்தவன்
கடவுளெனில்
கடவுளை படைத்தவன்
என்னைப் போல் ஒரு கதை சொல்லி
உலகமே
அழிந்து,வெந்து போனாலும்
எனக்கு மரணமில்லை
ஏனெனில்
நான் ஒரு கதை சொல்லி….