அதிகாலை பொழுது
கிழக்கில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை
என் வாழ்விலோ இதுவரை உதித்ததில்லை…
நான் மட்டும் தனியாக சாலையில்
எங்கோ பயணித்துக்கொண்டிருந்தேன்-இல்லை
சாலை எங்கேயோ பயணித்துக்கொண்டிருந்தது
தனிமைப்பட்ட என்னுடன்…
நான் பார்த்த காட்சிகள்-பார்த்திராத கோணத்தில்
பார்க்க மறுத்தக் காட்சிகள் பார்க்க வேண்டிய தருணத்தில்
அன்று கண்டேன்,
இயற்கையின் சரீரத்தையும்
சமுகத்தின் குரூரத்தையும்…
சாலையின் வலப்புறம்
புதருக்கடியில்…
புலன்களை அடகுவைத்த பெண்ணொருத்தி
புலன்களை அடக்கிவைத்த சாமியாருடன்…
சாலையின் இடப்புறம்
இரண்டு நாய்கள்
இருபுறங்களிலும் பெரிய வித்தியாசங்களை
காணவில்லை நான்
இளமையில் வறுமை
அதனால் தனிமை
வாழ்க்கையில் எதனையோ தேடிக்கொண்டு
எதனுள்ளோ வாழ்க்கையை தேடிக்கொண்டு
தூரத்தில் தெரிந்த ஒளியை நோக்கி
ஒளி காட்டிய வழியில் நகர்ந்தேன்
ஒளி சென்ற இடமோ சுடுகாடு
ஆடிக்களைத்தவர்களையும் க(லி)ழித்தவர்களையும் சுடும்காடு.
அங்கு பிணங்களுக்கு மத்தியில்-உயிருள்ள பிணமாய்
உணர்வற்ற வெட்டியான் ஒருவன்
உடல்களை எரித்துக்கொண்டிருந்தான்.
ஐயகோ! நரகல் பணி
வேறென்ன சொல்ல ?
நான் படித்ததோ பொறியியல்
அதனால் தான் என்னவோ வேலை கிட்டவில்லை
வேலையற்றவன் என்றது நாகரிகம்
வேலைக்கு தகுதியற்றவன் என்றது யதார்த்தம் !
சற்று தொலைவில் அந்த ரயில் நிலையம்
ரயில் எங்கிருந்தோ வேகமாக வந்துக்கொண்டிருந்தது
எனக்குள் ஏதோ ஓர் உந்துதல்
நான் வாழ்ந்து எதையும் சாதித்துவிடபோவதில்லை
இத்துனை நாட்கள் வாழ்ந்ததே சாதனைதான்.
ரயில் உலகில் பயணிப்பதற்காக மட்டுமன்று
உலகை விட்டு பயனிப்பதற்க்காகவும் தான்…
அருகில் படிக்காத பாமரனொருவன் மூட்டை சுமந்துக்கொண்டிருந்தான்
படிக்க வழியில்லாத சிறுவனொருவன் நாளிதல் விற்றுக்கொண்டிருந்தான்
நான் என்னை மறந்து அவர்களை நோக்கினேன்
படித்தவனுக்கோ வேலையில்லை
பாமரனுக்கோ படிப்பேயில்லை
அறிவிலிகள் பாமரர்களன்று
இயலாமைக்கும் இயங்காதமைக்கும் “வேலையில்லா திண்டாட்டம்” என
புனைபெயர் சூட்டிய நாம்…
படித்த அனைவரும் கல்வி போதிக்க துவங்கியிருந்தால்
ஒளிந்திருக்கும் அறியாமை ஒழிந்திருக்கும்.
உண்மை உரைக்க தொடங்கிய போது-ரயில் மோதியது
உயிர் பிரிந்தது…
என் உயிரல்ல
நான் கொண்ட அவ நம்பிக்கையின் உயிர்
வந்த வழி திரும்பினேன்.
சுடுகாட்டில் அவ நம்பிக்கையையும் அறியாமையும் புதைத்துவிட்டு
சந்தோசமாக வீடு நோக்கி நடந்தேன் தனிமையோடு.
இல்லை இல்லை, தன்னம்பிக்கையின் துணையோடு
இப்போது சூரியனும் உதித்துவிட்டது
கிழக்கில் மட்டுமல்ல
என் வாழ்விலும் தான்…
உதிக்க மறுக்கும் சூரியன்களை அடையாளப்படுத்த இடம்மாற்றி புரட்ட துணிந்துவிட்ட… மனிதன் தனித்தவன் இல்லை தணல்!
LikeLike