தமிழ் எழுத்தாளனின் மரணம்


அந்த தமிழ் எழுத்தாளன்
மாண்டுவிட்டான்
அழுவதற்கு யாருமில்லை

சாகும்வரை பலஆயிரம் பக்கங்களை
சில நூறுப் பேர்களுக்காக  மட்டும்
எழுதியவன் மாண்டுவிட்டான்

தமிழ்நாட்டில் தமிழில் எழுதும்
கீழ்த்தரமான செயலை இறுதிவரை
செய்தவன் மாண்டுவிட்டான்

நீசன் எனக்கூறி பலர்
அவனை
ஒதுக்கிவிட்டனர்

சபையில் ஆபாசம் பேசுகிறான் எனக்கூறி
அறிவிலிகள் பலர்
ஒதுங்கிநின்றனர்

ஒதுக்கியவர்களாலோ
ஒதுங்கியவர்களாலோ
ஒடுக்கமுடியவில்லை அவனை

இறுதிவரை வளையா
முதுகெலும்புடன்
எழுதியவன் மாண்டுவிட்டான்

பக்கத்துக்கு பக்கம்
சார்த்தர் பாரதி என பிதற்றினான்-அவனுக்காக
அழுவதற்கு சார்த்தரோ பாரதியோ இல்லை

அழ நினைத்த நண்பர்களோ-ஏனோ
தெரியவில்லை அழுகிறார்கள்
வாயினை மூடிக் கொண்டு

உண்மையை
உண்மையாய் எழுதியதை
தலைக்கணமென் றனர்சிலர்

அஞ்சுகின்றனர் இன்னும் சிலர்
அவனை பிடிக்கும் என சொல்வதற்கே -ஏனெனில்
அவன் ஓர் உன்னத தமிழ் எழுத்தாளன்

அந்த தமிழ் எழுத்தாளன்
மாண்டுவிட்டான்
அழுவதற்கு யாருமில்லை

ஆனால் அவன் அறையில்
இன்றும் அழுகுரல்
ஓயாது ஒலிக்கிறது

அவனுக்காக
அழுகின்றன- அவன் இயற்றிய
கதாபாத்திரங்கள்…

3 thoughts on “தமிழ் எழுத்தாளனின் மரணம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.