ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை
எல்லா பத்திரிக்கைகளும் கொலைவெறி பற்றியே
பேசுகின்றன. எம்.டிவியில் ஒளிபரப்பப்பெற்ற முதல் தமிழ் பாடல், ஒரே வாரத்தில் யுட்யுபில் (Youtube) ஒரு கோடி பார்வையாளர்களை கொண்ட பாடல் என இப்பாடலின் சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதோ இப்போது இந்த கட்டுரையை எழுதும் தருவாயிலும் கூட சோனி மேக்ஸில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாத பலரும் இந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பதால்,இந்த பாடலை நாம் தத்துவார்த்த ரீதியாக, சமுக ரீதியாக, மனோதத்துவ ரீதியாக சற்றே கொலைவெறியோடு ஆராயப் போகிறோம்.
சமகால தமிழ் சமுதாயத்தில் “கொலைவெறி” என்பது சராசரியாக பயன் படுத்தப்படும் ஒரு சாதாரண கொச்சை சொல்லே. ஆனால் இந்த கொச்சை சொல்லின் சிறப்பம்சம் என்னவென்றால்இதை நீங்கள் எந்த பதத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கோபம்,
ஆச்சர்யம், துக்கம், களிப்பு என எந்த சூழ்நிலையில் வேண்டுனாலும்
பொருத்திக்கொள்ளலாம்,ஆங்கிலத்தில் உபயோகிக்கப்படும் ஃபக் (fuck) என்ற வார்த்தையைபோல. (ஃபக் என்றதும் ஆபாசமாக பேசுவதாக எண்ணிவிடவேண்டாம். புக்கர் பரிசு பெற்ற பல இலக்கியங்களில் ஃபக் என்ற வார்த்தை சரமாரியாக உபயோகிக்கப் பட்டுள்ளது !)
ஃபக் போன்று பல பதங்களில் உபயோகிக்கப் படும் ‘கொலைவெறி’ என்ற சொல்லின் அர்த்தம் தமிழகத்தை சாரா பலருக்கு தெரியாது. இன்னும் அந்த வார்த்தையின் அர்த்தத்தை பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறெனில் ‘கொலைவெறி’ என்ற ஒரு வார்த்தைக்காக மட்டும் இந்த பாடல் பிரபாலமாகியிருக்க முடியாது .
இந்த அளவுக்கு இப்பாடல்பிரபாலமானதற்க்கு பிரபாலமாக்கப்பட்டதற்க்கு காரணம் யாது என்பதை நாம் ஆராய்வோம். இங்கு பிரபாலமாக்கப்பட்டது என்பதை அழுத்தி குறிப்பிடவேண்டும்.
இசைக்கு மொழியில்லை.அதனால் இசைக்காகவே இப்பாடல் பிரபலமானது என யாரவது கூறினால் அவர்களை நாம் கல்லால் அடிக்கலாம். 35 வருடங்களாக இளையராஜா இயற்றிடாத இசையையோ, பதினாறு வருடங்களாக ரஹ்மான் செய்திடாத இசையையோ இந்த இசையமைப்பாளர் செய்திடவில்லை. உலகிலேயே தலைசிறந்த பாடல்களில் ஒன்றாக கருதப்படும் ‘ராக்காம கைய்யதட்டு’ என்ற பாடலை நிச்சயம் வட இந்தியர்கள் பலரும் கேட்டிருக்க மாட்டார்கள். இசையமைப்பிற்காக போற்றப்பெறும் இந்தபாடலே இந்தியாவில் பிரபலமாகதபட்சத்தில், இசைக்காக ‘கொலைவெறி’ பிரபாலமாகியிருக்க முடியாது
தனுஷ் பாடுவது போன்று இந்த பாடல் காட்சியாமைக்கப்பெற்றிருக்கும். பத்திரிக்கைகளோ, தனுஷ் இந்த பாட்டை பாடும் போது படம் பிடிக்கப் பெற்ற காணொளியேயது என்று குறிப்பிடுகின்றன. சற்றே சிந்தித்து பார்ப்போமெனில் இது அந்த நடிகரை பாடுவது போல் நடிக்க வைத்து இயக்கப்பெற்ற ஓர் சாதரணமான ப்ரோமோ பாடலே என்பது விளங்கும். ஹிந்தி திரைப்படங்கள் போன்று தமிழில் யாரும் ப்ரோமோ பாடல்கள் வெளியிடுவதில்லை. (சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற ‘தண்ணீரில் சிநேகிதம்’ பாடலே தமிழில் வெளிவந்த முதல் ப்ரோமோ பாடல்). இந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘டெல்லி பெல்லி” போன்ற திரைப்படங்களின் ப்ரோமோ பாடல்களோடு ஒப்பிடுகையில் கொலைவெறி ப்ரோமோ அந்த அளவுக்கு அதிசயிக்க வைக்கவில்லை. இந்தப் பாடலின் வரிகளோ லாவோசி தத்துவத்தையோ ஜெயின் கவிதைகளையோ தழுவி எழுதப்பெற்றவையன்று .எனவே பாடலின் வெற்றிக்கு காரணமாக காணொளியையும் வரிகளையும் கருத முடியாது. வழக்கமாக தமிழகத்தை சார்ந்த எந்த விடயமும் இந்திய அளவில் கண்டுக்கொள்ளப்படாது. ஏனெனில் அது தமிழகத்தை சேர்ந்த விடயம். தென் மூலையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஓர் பாவப்பட்ட புண்ணிய பூமியை தமிழகம்.ஜப்பானில் சக்கை போடு போட்ட முத்து திரைப்படத்தை பற்றி இந்திய துணைக்கண்டதை சார்ந்த பலரும் கேள்வி கூட பட்டிருக்க மாட்டார்கள். அவ்வாறெனில் இப்பாடலின் வெற்றியின் பின்புலம் என்னவாக இருக்க முடியும் !
இந்த பாடலின் முழு அர்த்தம் பலருக்கு புரியாவிடினும், இதன் சாராம்சம் பலருக்கும் புரிந்துவிட்டது. புடித்து விட்டது. ‘காதல் தோல்வி’ என்பதே அது. காதல் தோல்வி பாடல்கள் அன்று தொட்டு இன்று வரை வந்துக் கொண்டிருந்தாலும் சமகாலத்தில் எழுதப் படும் வரிகள் சற்றே வித்யாசமானவை. பழைய பாடல்களில் கதாநாயகன் நாயகியை நினைத்து உருகி உருகி பாடிவிட்டு, ‘ஏன் இப்படி செய்தாய் நீலவேணி’ என்பது போல் பாடலை முடிப்பார். ஆனால் தற்போது நாயகையை எந்த அளவுக்கு திட்ட முடியுமோ அந்த அளவுக்கு நாயகன் திட்டுவது போன்று பாடல்கள் எழுதபடுகிறது. அது போன்ற பாடல்கள் பிரபலமாவது ஆரோக்கியமான விடயமா என்பன போன்ற பெண்ணிய ஆராய்ச்சியில் நாம் இறங்கப்போவதில்லை. ஆனால் ‘கொலைவெறி’ பாடலின் பின் இருக்கும் ரசனை மாற்றத்தை பற்றி மட்டுமே நாம் கவனிப்போம்.
இந்தியாவை பொறுத்தவரை சமுக ரீதியான தத்துவார்த்த ஆராய்சிகளில் யாரும் குறிப்பிடும்படி ஈடுபட்டதில்லை. திடிரென எம். ஜி. ஆர் பிரபாலமாகிறார். திடிரென ரஜினி பிரபாலமாகிறார். இது வெறும் ரசனை மாற்றம் என்று நாம் விட்டுவிடமுடியாது. ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தில். ஓர் தலை முறையில் ஏற்படும் மாற்றமே அது. இதை நாம் ஆராய்ந்தால் ஒரு நடிகரின் பின் செல்லும் கூட்டத்திலுள்ள அத்தனை பேருக்கும் உளவியல் ரீதியாக ஏதோ ஓர் பொதுவான விடயம் உள்ளது என்பது விளங்கும். இது போன்ற கூட்டங்கள் வெறும் சினிமா சார்ந்தே இயங்குவதால், அணைத்து கூட்டங்களும் வெறும் ‘ரசிகன்’ என்ற பொதுவான சொல்லில் அடக்கப்பட்டுவிடுகின்றன. ரசிகர் கூட்டங்களை நாம் இயக்கமாக கருத முடியாததால் அதை சார்ந்த ஆராய்சிகளுக்கும் வழியின்றி போகிறது.
ஆனால் மேற்கத்திய நாடுகளில் சினிமா தவிர்த்து, இசை, ஆன்மிகம், விளையாட்டு என பல பிரிவுகளில் பலர் பித்து பிடித்து திரிவதால் அவ்வாறான கூட்டங்கள் ஓர் இயக்கமாக, தலைமுறையாக கருதப்படுகிறது. அதை குறித்து பல ஆராய்சிகளும் செய்யப் படுகிறது. உதாரணமாக ஹிப்பிகள் (Hippies) எனவும், பீட் தலைமுறை (beat generation) எனவும் பல இயக்கங்கள் அங்கு உண்டு. ஒத்த கருத்துடைய ,குறிப்பிட்ட எண்ண அலைகளை கொண்ட மனிதர்களை கொண்ட இயக்கங்களே அவை.
இந்தியாவில் ‘அகோரிகள்’ என்ற பிரிவு உள்ளது. அகோரிகள் அனைவரின் பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரி அமைந்திருக்கும். அதை தவிர்த்து வேற எந்த பிரிவும் இங்கு குறிப்பிட படவில்லை. ஆனால் சினிமாவால் ஏற்படும் ரசனை மாற்றத்தை ஆராய தொடங்கினால் இந்தியாவில் பல பிரிவுகள் (Sects) இருப்பதை நாம் கண்டுபிடிக்கலாம்.
அணைத்து ஆராய்சிகளும் அனுமானங்களைக் கொண்டே தொடங்குவதால், இந்த பாடலை பொறுத்தவரை ‘காதல் தோல்வி பிரிவு’ (Love failure Sect ) என்ற பிரிவை நாம் அனுமானித்துக் கொள்வோம். மனோதத்துவரீதியாக காதல் என்பது வெறும் காமம் எனப்பட்டாலும், சமுக ரீதியாக காதல் என குறிப்பிடப்படும் ஒன்றை பற்றியே நாம் இங்கு கவனிக்க போகிறோம்.உலகில் அனைவரும் காதலில் தோல்வி கண்டவர்களே. அணைத்து ஆண்மகனும் நிச்சயம் சிறுவயதில் தன ஆசிரியையை காதலித்து இருப்பான் என்கிறது ஓர் ஆய்வு. அதுவே அவன் முதல் காதல். பெண்களும் தன் ஆசிரியையை காதலித்து இருப்பார்கள். (பெண்களின் முதல் காதல் பெண்கள் மீதுதான் என்பது விவாததிற்கு உட்படுத்த வேண்டிய கூற்று. அதற்க்கு நாம் அவர்களின் உடல் கூறுகளை கூறு போட்டு ஆராய்ச்சி செய்யவேண்டும். அதை பின் ஒரு நாள் விவாதிப்போம். அதைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புபவர் Simone Ernestine Lucie Marie Bertrand de Beauvoir இயற்றிய ‘The Second Sex’ என்ற புத்தகத்தையும் திரு.சுஜாதா எழுதிய ‘எப்போதும் பெண்’ என்ற நாவலையும் படித்து பார்க்கவும்’). பலரும் காதலில் தோல்வி கொண்டவர்கள் என்பதால் இப்பாடலை பலரும் ஏற்றுக் கொண்டார்கள். இதில் குறிப்பிடும் வரிகள் உண்மையாக இருபதனால் என்னவோ பெண்களும் இப்பாடலை விரும்புகிறார்கள்.
சிக்மண்ட் பிராய்டு மனித பிரக்ஞைகளை (உணர்வு நிலைகளை) படிநிலை படுத்துகையில் ‘தன்னுணர்வற்ற நிலை’ என்று ஒன்றை குறிப்பிடுகிறார். நுண்ணுணர்வு சார்ந்த இந்த விடயத்தை மறுவரையரைப் படுத்திய சிலர் ‘தன்னுணர்வற்ற தொடர்பாடல்’ என்ற ஒரு தத்துவத்தை முன்வைக்கின்றனர். இதை எளிதாக குறிப்பிடவேண்டுமெனில், ஒரு மனிதன் தான் அறியாமலேயே தன் எண்ணங்களை பிறர் மனதில் செலுத்துவது. இங்கு விடுநர், பெறுனர் இருவருமே எண்ண அலைகளை உணர மாட்டார்கள். ஒருவர் மனதிலிருந்து எண்ணங்கள் அடுத்தவருக்கு பரவிக் கொண்டே இருக்கும். இதன் ஓர் வடிவமே டெலிபதி என்பது. (பிசிராந்தையார் என்னும் புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னரும் ஒருவரை ஒருவர் காணமலேயே நட்புக்கொண்டு,தீவிர நண்பர்களாகி பின்னொருநாள் வடக்கிருந்து (வடக்கிருந்து- உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல்-சாகும் வரை உண்ணா விரதம் ) உயிர் துறந்தனர் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது.தமிழன் தீவிர மனோதத்துவ ஆராய்ச்சியில் அன்றே இறங்கியுள்ளான் என்பதற்கு இது ஓர் சான்று) .இப்பாடலின் வெற்றிக்கு ‘தன்னுணர்வற்ற தொடர்பாடல்’ என்பதை ஒரு காரணமாக குறிப்பிடமுடியும். பல பாடலின் வெற்றிக்கு அதுவே காரணமெனினும் இப்பாடலில் ‘தன்னுணர்வற்ற தொடர்பாடல்’ சற்றே தீவரமாக உள்ளது.
இதை தவிர்த்து இப்பாடல் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்பது தெரியாமலேயே சிலர் பிடித்த மாதிரி காட்டிக் கொள்கின்றனர். ‘சைதை தமிழரசி’ கதை போல.ஒரு படத்தில் கவுண்டமணியும் சத்யராஜும் கொக்கரிப்பார்கள், “என்ன சைதை தமிழரசி தாகப் பட்டாரா ! ” பின் வரும் காட்சியில், “யாருப்பா அது தமிழரசி” என்று பேசிக் கொள்வார்கள். அது போலவும் இப்பாடல் பிரபாலமாகியிருக்கலாம்.
இப்பாடலின் வெற்றிக்கு எத்தனை காரணங்கள் சொன்னாலும், இன்னும் சில வருடங்களில் இப்பாடல் காற்றில் கரைந்துவிடும். வெறும் பாடல் என இதை ஒதுக்கி விடாமல், இது போன்ற திடீர் தீவிர ரசனைகள் ஆரையபடவேண்டும். ஒரு மனிதனின் வாழ்வியல் அவன் வளர்ந்த சமுக சூழலை பொறுத்தே அமைகிறது.சமிபத்தில் நான் சந்தித்த ஓர் அமெரிக்க பெண்மணி ஒரு இசைக் குழுவை பற்றி வினவினார். “உங்களுக்கு BVB தெரியுமா.” நான் “ தெரியும்..
Black veil Brides” என்று சொன்னதும், அவர் பின் வருமாறு பேச தொடங்கினார் “அவர்கள் கடவுள். அவர்கள் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தனர்…அவர்களுக்காக நான் மரணிக்கவும் தயார் ” கோர்வை அற்ற ஓர் ஆங்கிலத்தில் ஒரு பிச்சியை போல தன்னிலை மறந்து அந்த பெண்மணி பேசிக் கொண்டுபோனார். அந்த இசைக் குழு அவர் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தையே இது காட்டுகிறது. அவரை போல் அவர் ஊரில் பலர் உள்ளதாக குறிப்பிட்டார். இது போன்று விடயங்கள் அங்கு நிறைய நிகழ்வதுண்டு. அனால் அனைத்தும் ஆராயப்படுகின்றன. அதுபோல் ஒட்டு மொத்தமாக நம் சமுகத்தில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள், அது விளையாட்டு துறையெனினும் , சினிமா துறையெனினும், இன்ன பிற துறையெனினும் ஆராயப்பட வேண்டும். அப்போது தான் சம கால தலைமுறையின் மனோ நிலையை உணர முடியும். இந்தியாவில் நிச்சயம் மனோதத்துவ புரட்சி நிகழ்த்தப்படவேண்டும். அதை செய்யும் பட்சத்தில் நிறைய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம்.
இப்போது இப்பாடல் நல்ல பாடலா இல்லையா என்பதை பற்றி விவாதிக்க வேண்டும். எளிமையான இசை, எளிமையான வரிகள் என அமைந்த பாடல் கேட்பதற்கும் பாடுவதற்கும் நன்றாக இருப்பதால் இது நல்ல பாடலே. ஆனால் ஒரு பிரபல ஹிந்தி பாடாலாசிரியர், இதனை கீழ்த்தரமான பாடல் என குறிபிடுகிறார். பல வருடகளுக்கு முன் ஹிந்தியில் வெளிவந்த ‘சோலி கே பீச்சே க்யா ஹேய் ! சோலி கே பீச்சே…சுனரி கே நீச்சே க்யா ஹேய் ! சுனரி கே நீச்சே… ” என்ற பாடல் நினைவிருக்கலாம். இதை நேரடியாக தமிழில் மொழி பெயர்த்தால் “ரவிக்கைக்கு பின்னால் என்ன !” என்ற ஓர் கவித்துவமான அர்த்தம் கிட்டும். சமிபத்தில் ஹிந்தியில் வெளியான “Bhaagh Bhaagh Dk Bose Dk “என்ற அச்சில் ஏற்ற முடியாத பாடல் பிரபலமானது. விரசமான அந்த பாடல்களை ஏற்றுக் கொண்டவர்கள், விரசமற்ற இந்த பாடலை எதிர்கிறார்கள். இந்திய சமுகம் குறிப்பாக வட இந்திய இந்து சமுகம் பெண்களை அன்று தொட்டு இன்று வரை விரசமாகவே, போகப் பொருளாகவே சித்தரித்து வருவாதாக சாரு குப்தா என்ற பெண்மணி ‘Sexuality Obscenity, Community-Womens, Muslims and the Hindu Public In Colonial India ‘ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அது போல் சமுகத்தில் நிலவும் பல கீழ்தரமான விடயங்களை எதிர்ப்பதை விடுத்து ஒரு சாதரன சினிமா படலை எதிர்பதற்கு காரணம் இப்பாடல் தமிழ்நாட்டை சேர்ந்தது என்பதை தவிர வேறென்ன இருக்கமுடியும்.
பாடல் பிரபலமானது ஒரு புறம் இருக்க பாடல் பிரபலமாகப்பட்டதை பற்றி தீவிரமாக கவனிக்க வேண்டும். முதன் முதலில் இந்த காணொளியை நான் யுட்யுபில் பார்க்கும் போது பார்வையாளர்களின் (no of views) எண்ணிக்கையைவிட, விரும்பியவர்களின் (no of likes) எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அது எவ்வாறு சாத்தியம் என்று இன்னும் புரியவில்லை.
இந்த பாடல் தங்க்லீஷ் என குறிப்பிடப் பட்டாலும், தொண்ணுறு சதவிதம் ஆங்கிலத்தில் தான் எழுதப் பட்டிருக்கிறது. அதனால் தான் இந்த பாடலை வெளியிட்ட கார்ப்ரெட் நிறுவணும் சரி, இன்ன பிற கார்ப்ரெட்களும் சரி விழுந்து விழுந்து இந்த பாடலை பிரபலபடுத்திக் கொண்டிருக்கின்றன. இதுவே தமிழில் எழுதப் பெற்றிருந்தால் நிச்சயம் பிரபாலபடுதியிருக்க மாட்டார்கள். அது பிற மாநிலத்தவருக்கு தமிழ் புரியாது என்பதனால் அன்று.தமிழ், ஹிந்தி எதிர்க்கும் கூட்டம் என முத்திரை குத்தப் பெற்ற ஓர் இனத்தின் மொழி என்பதால். Bebot Bebot என்ற ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பாடல், மொழி புரியாமலே இந்தியாவில் வரவேற்க்கப் பட்டது. ஆனால் கொலைவெறி பாடல் தமிழில் இருந்திருந்தால் நிச்சயம் வரவேற்க்கப் பட்டிருக்காது.
அதனால் இந்த பாடலை பிரபலப்படுத்துபவர்களின் நோக்கம் வட இந்தியா-தென் இந்தியாவை இணைப்பது என எண்ணி விட வேண்டாம்.. கல்லா கட்டுவதே அவர்களின் நோக்கம. காரணம் இன்று சினிமா இயங்கும் முறை பெரிதும் மாறிவிட்டது. அந்த காலத்தில் சினிமாவை நன்கு புரிந்தவர்கள் மட்டுமே சினிமா தயாரிக்க முடியும். ஒரு தயாரிப்பாளர் நடிககருக்கு அட்வான்ஸ் கொடுத்து படத்தை தொடங்கி, சில காட்சிகளை இயக்கியப்பின் , விநியோகஸ்தர்களுக்கு போட்டு காண்பித்து, அவர்களிடமிருந்து பணம் பெற்று மிச்ச படத்தை முடிப்பார். அதாவது படத்தில் போடப்பெற்ற முழுப் பணமும் ஒருவருடையதாக இருக்காது. ஆனால் இன்று கார்ப்ரெட் நிறுவனங்கள் நேரடியாக கோதாவில் இறங்கி விட்டன. முழு பணத்தையும் ஒரே நிறுவனமே செலவழிக்கிறது.. .சராசரியான பட செலவு ஐம்பது கோடி என ஆகிவிட்ட நிலையில் ஒரே மாநிலத்தை மட்டுமே நம்பி கள்ள கட்ட முடியாது. (இந்தியாவை பொறுத்த மட்டில் இரண்டே மாநிலங்களே உள்ளன..
இந்தி பேசும் மாநிலம். இந்தி பேசாத மதராஸ். இந்தியாவில் பலரும் தென் இந்தியா என்பது வெறும்
மதராஸ்தான் என இன்னும் நம்பிக் கொண்டிருக்கிண்டர்.) அதனால் இந்தியில் இயக்கப்படும்
பெரிய படங்களை தமிழ்நாட்டில் வெளியிடவேண்டிய கட்டாயத்திற்கு கார்ப்ரெட் நிறுவனங்கள்
தள்ளப் பட்டிருக்கின்றன. அதே போல தமிழ் படங்களையும் ஹிந்தியில் வெளியிடும்
முயற்சியில் இறங்கி விட்டனர். அப்போது தான் படத்திற்காக செலவு செய்த
பல கோடிகளை மீட்க முடியும்.
இப்போது இந்த பாடலை பிரபலப் படுத்தினால், திடிரென நாளை தனுஷை ஹிந்தியில் ஒரு பாடல் பாடவைக்க முடியும் . அல்லது ஒரு ஹிந்தி படத்தின் கதாநாயகன் ஆக்க முடியும் . ‘கொலைவெறி ‘ பாடல் நாயகன் தனுஷ் என வட இந்திய முழுவது பிரபலபடுத்த முடியும்.அப்போது எவ்வளவு கல்லா கட்டப் படும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். இதுவே கார்ப்ரெட் நிறுவங்களின் நோக்கம்.
இந்தியாவை பொறுத்த வரையில் எல்லா விடயங்களிலும் முதலாளித்துவம் ஒளிந்து கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் முதலாளித்துவ முதலை மக்களின் காலை கடித்துக் கொண்டே இருக்கிறது. அதன் ஒரு வடிவமே கார்ப்ரெட் நிறுவனங்கள்.அம்பானி 5000 கோடியில் வீடு கட்டுகிறார் என்றால், அவர் உழைப்பு அவர் பணம் என விட்டு விடலாம். ஆனால் 50 கோடி பேர் வறுமையில் வாடும் ஓர் நாட்டில் 5000 கோடியில் ஒருவரால் வீடு கட்ட முடிகிறதென்றால் இந்தியாவின் உண்மை முகத்தை நினைத்து நாம் அருவருப்படைந்து தான் தீர வேண்டும்.
இந்தியா என்பது ஜனநாயக போர்வையில் ஒளிந்துள்ள ஓர் முதலாளித்துவ நாடு (A capitalist country in the disguise of democracy). இங்கு ஏற்படும் நல்ல மாற்றங்களை, அது சினிமா பாடலேனினும் நாம் வரவேற்ப்போம். ஆனால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் முதலாளித்துவ முதலைகளை விழிப்புணர்வோடு புறங்கையால் ஒதுக்கிவிட்டு பயணிப்போம், பகுத்தறிவை கலட்டி வைக்காமலேயே…
Excellent review machi… but a bit long…..
LikeLike
Thanks da. Things were complicated. was trying to make it simple. that’s why it became lengthy.
LikeLike
இந்த கட்டுரையின் சாராம்சம் கடைசி 2 பத்திகள் எனபது எனது எண்ணம்
LikeLike