மணி பத்து ஆச்சு, இன்னும் பாஸ்கர் சாரா காணோம். பாஸ்கர் சார் யாருனு கேக்குறீங்களா ? அவருதாங்க அந்த மாடிவூட்டுக்காரர். பெரிய பாங்க் ஆபிசர். ஒன்பது மணி ஆச்சுன்னா போதும், அவரு வீட்டு வாசல்ல வெத்தலய்ய மென்னுக்கிட்டே உக்காந்திருப்பாரு.வீட்டுலயே எவ்வளவு நேரம்தான் சும்மா ஊக்கந்திருக்குறது ! புழுக்கமா இருக்காதா ? அதான் காத்தோட்டமா அரைக்கை பனியன் ஒண்ண போட்டுக்கிட்டு, போற வறோங்க எல்லாரையும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பாரு.
அவருக்கு குல்ஃபினா ரொம்ப புடிக்கும். எனக்கு அவர ரொம்ப புடிக்கும். ஆனா அவருதான் என்ன பாத்தாலே சிடுசிடுனு முகத்த வெச்சுப்பாரு.அன்னைக்கு அப்படிதான், குல்ஃபி வாங்குற சாக்குல அவரு பக்கத்துல போயி நின்னேன். அவரு என்ன செஞ்சாரு தெரியுமா ! அவரு என்ன கோவமா திட்டியிருந்தா கூட நான் கவலை பட்டு இருக்க மாட்டேன். ஏனா இந்த ஊரே என்ன கேவலமாதான் பேசும். அத பத்தி எனக்கு கவலை இல்லை. ஆனா அவரு என்ன அருவருப்பா பாத்தாரு. அதான் என்னால தாங்கிக்க முடியல. அன்னைக்கு நைட்டெல்லாம் தூங்கல. அழுதுக்கிட்டே இருந்தேன். என் பையன், ‘மம்மி, டோன்ட் க்ரை. மம்மி, டோன்ட் க்ரை’னு சொன்னான். அப்பதான் என் புத்திக்கே உரச்சுது.
என்னடா என் புள்ள இங்கிலீஷ் பேசுராணு பாக்குறீங்களா! நான் தான் பட்டிக்காட்டு சிறுக்கி. என் புள்ளய அப்படி விட்டுருவனா ! அவன் பெரிய ஸ்கூல்லயில்ல படிக்குறான். அங்க எல்லாரும் தஸ்சுபுஸ்சுனு இங்கிலீஷ்லயே பேசுவாங்க.என் புள்ளயும் அவங்கள மாதிரி இங்கிலீஷ் பேசும்போது எனக்கு பெருமையா இருக்கும்.
அன்னைக்கு கூட ஏதோ இங்கிலீஷ்ல சொன்னான், “ யு ஆர் நாட் அட் ஆல் அந்தர்ஸ்டாண்டிங்க் மீ மம்மீ”. என்னடா பேசுறணுக்கேட்டேன். ‘நீ என்ன புரிஞ்சிக்கவே மாட்டுறனு’, அதுக்கு அர்த்தமா. என்ன பெரிய மனுஷன் மாதிரி பேசுறான் பாருனு, நான் அப்படியே அவன கட்டிபுடிச்சி முத்தம் கொடுத்தேன்.
காலையில நீலக் கலர் சொக்கவா மாட்டிக்கிட்டு என்புள்ள ஸ்கூலுக்கு போகுமோது என் கண்ணே பட்டுடும் போல இருக்கும்.ஆனா நான் இதுக்கெல்லாம் பாஸ்கர் சாருக்குதான் நன்றி சொல்லணும். அவரு புள்ளைங்கனா ரொம்ப உசுரு.அதுலயும் என் புள்ள மேல தனி கரிசனம்.ஆனா அவருக்குதான் பாவம் புள்ள இல்லை. பெத்தாதான் புள்ளயா ?
அன்னைக்கு அப்படிதான் என் புள்ளய, கடையுல பாத்துட்டு மிட்டாய் வாங்கிக் கொடுதிட்டு.
“என்னடா படிக்குர”னு கேட்டிருக்காரு. இவன் பேந்த பேந்த முழிச்சிருக்கான். அஞ்சு வயசாகியும் இன்னும் புள்ளய ஸ்கூல்ல சேக்கலயானு, என்கிட்ட உரிமையோட அவரு சண்டை போட்டத இப்ப நினச்சாக் கூட எனக்கு மனசெல்லாம் ஐஸ் வெச்ச மாதிரி இருக்கும். அன்னைக்கு தான் அவரு என்கிட்ட முத முத பேசுனாரு.ஆனாலும் அதுல ரொம்பநாள் பழகின மாதிரி ஒரு உணர்வு.
போன வருசம்தான், அவரு என் புள்ளய ஸ்கூல்ல சேத்தூட கூட்டிட்டு போனாறு.நானும் கூடவே போனேன்.அவருக்கு அங்க அவ்வளவு மரியாதை. இப்படிதான் நிறைய ஏழை குழந்தைங்கள அங்க சேத்துவிட்டுருக்காராம். அந்த சிஸ்டர் அம்மா சொன்னாங்க…
‘பாஸ்கர்…. மை டியர் சன்…யேசு எப்பவும் உன் கூடவே இருப்பார். எல்லாம் குழந்தைங்களயும், உன் பிள்ளைபோல் எண்ணுகிற இந்த மனம் யாருக்கு வரும் !’
இவரும் பெருந்தன்மையா சொன்னாரு , ‘ஏதோ என்னால முடிந்தது. பெத்தாதான் புள்ளயா ?’
அப்ப அவரு கண்ணுல ஒரு சோகம் தெரிஞ்சுது. நானும் கண் கலங்கி போய் அப்படியே நின்னேன்.அந்த சிஷ்டரோட மென்மையான குரலை கேட்டுதான் எனக்கு நினைவே வந்தது.
“உன் பேரு என்னமா ?”
ஐய்யோ! என்ன கேள்வி இது. இந்த கேள்விக்கு நான் எப்பவும் உண்மைய சொன்னது இல்ல, சொல்லவும் கூடாது. சொல்லி வச்ச மாதிரி எல்லாம் கஷ்டமரும் இந்த கேள்வியதான் முதல கேப்பானுங்க . அங்க அவங்க எதிர்பார்க்குறது என் நிஜமான பேர இல்ல.
“உன் பேரு என்னடி செல்லம் ?“
“சிலுக்கு…”
“சும்மா சொல்லக்கூடாது. சிலுக்கு மாதிரிதான் இருக்க. ஆனா இனிமே உன் பேரு சிலுக்கு இல்ல. ரம்யா. யாரு தெரியுமா. புதுசா வந்திருக்காளே.அந்த பம்பாய் நடிகை. நான் அப்படிதான் கூப்பிடுவேன்…“
என்ன இலவோ. வரவன் எல்லாம் நடிகை பேர வெச்சே கூப்பிடுவான். அப்படி என்னதான் அவனுங்க பொண்டாட்டிகிட்ட இல்லாதது அந்த நடிகைங்க கிட்ட இருக்கோ ! வாங்குன காசுக்கு நானும் சும்மா இருந்திடுவேன்
“என்னமா அமைதியா நிக்குற. உன் பேரு என்னமா ?”
“மல்லிகா”
ஆமா. என் பேரு மல்லிகா. என் புருஷன் அந்த ஓடுகாலி பையன் இருக்கும் போது என்ன அபப்டித்தான் கூப்பிடுவான். புருசனா இருக்க முடிஞ்சவனுக்கு நல்ல தகப்பனா இருக்க முடியல. ஒரு உண்மைய சொல்லட்டுமா. எங்களுக்கு கல்யாணமே ஆகல. என் பக்கத்துக்கு ஊட்டுக்காரந்தான் அவன்.
என்ன வர்ணிச்சு கவிதை எல்லாம் எழுதுவான். ஒரு கவிதை சொன்னானே அருமையா !
“மல்லிகை பூவில் வண்டு ஏறுவதில்லை
மல்லிகையே வண்டாகிய நான் உன்னை நீங்குவதில்லை”
எனக்கு கவிதை புடிச்சதோ இல்லையோ அவன புடிச்சது. நான்தான் ஆசைப்பட்டு அவன் கூட படுத்தேன். முதல பயந்தான். அப்பறம் நீ அம்பலயானு கேட்டேன். எங்க இருந்துதான் வந்ததோ அந்த வீரம்…
எப்பவும் நிறைய பேசுவான். ஆனா படுக்கைல மட்டும் நான் தான் பேசுவேன்.ரொம்ப சந்தோசமா இருந்தோம். ஆனா ஒருநாள் நான் வயிறு வீங்கிபோய் போய் நின்னத பார்த்தவுடனே கோழை ஆயிட்டான். எங்க ஓடிபோனான்னு இன்னும் தெரியல.
இத பார்த்த என் ஆத்தா அய்யோ அம்மான்னு ஊற கூட்டுனா.
“அப்பன் பேர் தெரியாத புள்ளைய கலச்சிருடி”
“ஏன், ஆத்தா நான் இருக்கேன் பத்தாதா! உன் புருஷன் செத்ததுக்கப்பறம் என்ன கொன்ன போட்டுட்ட? அதுமாதிரி என் புள்ளைய நான் வளர்ப்பேன் “
“என் வயித்துல வந்து பொறந்த கோடாலி காம்பே. சொல்ற பேச்ச கேளு. “
“புள்ளைய கலைச்சா மட்டும் என்ன மகாராசனுக்க கட்டிவைக்கப் போற. இன்னொரு ஓடு காலி பையன் வரப் போறான். நான் இப்படியே இருந்திடுறேன்”
ஒருநாள் அவளும் போய் சேர்ந்துட்டா. நாதியத்து நிக்கையில உதவி பண்ணுறேன்னு நிறையப் பேர் வந்தானுங்க, எல்லாரும் ஒரே கேள்விதான் கேட்டானுங்க. ‘என் கூட படுக்கிறியா?’ஒருத்தனோட படுத்தேன். நிறைய காசு கொடுத்தான். இப்ப அதுவே பழகிப் போச்சு. நான் பட்டினி கிடக்கலாம், என் புள்ளைய பட்டினி போடா முடியுமா ?
“என்ன ஒரே யோசனைல நிக்கிறீங்க !
உங்க பையன் இங்க நல்ல படிப்பான் “
ஐயோ! பாஸ்கர் சார்தான் பேசுறாரு. அதுவும் என் கூட. என் நெஞ்செல்லாம் சந்தோசத்துல்ல அடைக்கிற மாதிரி இருந்தது. என் மேல அவருக்கு எவ்வளவு கரிசனம்…
” நான் ஏதேதோ கேள்வி பட்டேன். வளர்ற புள்ளைய வச்சுக்கிட்டு நம்ப ஒழுக்கமா இருந்தாதான் அவனும் ஒழுக்கமா வளருவான். நீங்க செய்ற தொழில விட்டுடுங்க ”
அவரு என்ன பேசவே விடல. உரிமையோட அவரு பேசுனத நான் தடுக்க விரும்பல.
“என் நெருங்கிய நண்பன் ஒருத்தன் கார்மெண்ட்ஸ் வச்சிருக்கான். அங்க ஏதாவது வேலை வாங்கி தரேன்”
நான் தயங்கி நின்னத பார்த்திட்டு ,”பெண்கள ரொம்ப மதிக்கிற பெண்ணியவாதி அவன். நிச்சயம் அங்க உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது. என்ன சம்மதமா?”
உடனே ஒத்துக்கிட்டு நான் மறுநாளே வேலைக்கு சேர்ந்துட்டேன். ஆனா மூணாவது நாளே நின்னுட்டேன். பெண்கள மதிக்கிற அந்த உத்தமன் மரியாதைய கேட்டான், “நான் உன்ன வச்சுக்கிட்டா, வைப்பாட்டியா?”
“போடா கட்டையில போறவனே “
உடனே போன போட்டு சொன்னான் அவருகிட்ட ,”பாஸ்கர் இவ இன்னும் திருந்தல. என்னையே படுக்க கூப்பிடுறா “
அப்பறம் நான் என்ன செய்ய. நான் அந்த உத்தமன பத்தி பாஸ்கர் சார்கிட்ட எதுவும் சொல்ல விரும்பல ..ஊரு நினைக்கிறமாதிரி அவரும் என்ன தப்பானவனு நினைச்சுட்டார்.அதுக்கப்பறம் என்ன பார்த்தாலே அருவருப்பா முகத்த திருபிப்பார்.
சிலநேரம் கோபம் வரும்.உண்மையெல்லாம் சொல்லிடலாம்னு தோனும்.அப்பறம் அந்த நல்ல மனுஷன் மனசு கஷ்டப் படவேண்டாம்னு அமைதியா இருந்திடுவேன். என்ன உண்மைன்னு கேக்குறீங்களா ! புள்ள இல்லாத அந்த மனுஷன் பூச்சி மாதிரி காலையில போயிட்டு இராத்திரி வருவாரு. ஆனா அவரு இல்லாத நேரத்துல அவரு வீட்ல நிறைய காரு நிக்கும். நிறைய ஆம்பளைங்க வருவானுங்க. அவரோட பத்தினி படியே தாண்டுனதில்லை. வீடு உள்ளயே எல்லாம் நடக்கும் போல!
ஆனா நான் கடை வீதில நடக்கும் போது மட்டும் எல்லாம் ஆம்பளைங்களும் கண்ணாலயே கற்பழிக்குற மாதிரி பாப்பானுங்க. என்ன பாக்குற பொம்பளைங்க எல்லாம் ஒரே வரியதான் சொல்லுவாளுங்க , ” போறா பாரு தேவுடியா”
எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். நான் ‘தேவுடியா’னா என் கூட படுக்குற, கண்ணாலயே கற்பழிக்குற அவளுங்களோட பதிவிரத புருசனுங்கள என்னனு சொல்றது !